ஆசியாவின் 'கோடீஸ்வர தலைநகரமாக' உருவெடுத்த மும்பை..!! இந்தியாவில் இத்தனை பணக்காரர்களா..?
ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2024 வெளியிடப்பட்டது. அதன்படி, இந்தியாவின் நிதி மையமாக இருக்கும் மும்பை, 'கோடீஸ்வர தலைநகரமாக' உருவெடுத்துள்ளது. இது ஆசியாவின் பணக்கார நகரமாக மட்டுமின்றி, இந்தியாவின் பணக்காரர்களின் சிறந்த தேர்வாகவும் உள்ளது. மும்பைக்கு அடுத்தபடியாக டெல்லி மற்றும் ஹைதராபாத் இடம்பிடித்துள்ளது.
மும்பையில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்தாண்டில் 58 புதிய கோடீஸ்வரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் மும்பை மிகப்பெரிய கோடீஸ்வர நகரமாக உருவெடுத்துள்ளது. டெல்லியை பொறுத்தவரை மேலும் 18 புதிய கோடீஸ்வரர்கள் இணைந்துள்ளனர். அதன்படி, இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 29% ஆக அதிகரித்துள்ளது.
அதே நேரம் சீனாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 25% குறைந்துள்ளது. இதன் மூலம் ஆசியாவில் செல்வத்தை உருவாக்கும் மையமாக இந்தியா வளர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. ஹுருன் இந்தியாவின் நிறுவனர் மற்றும் தலைமை ஆராய்ச்சியாளரான அனஸ் ரஹ்மான் ஜுனைட் இதுகுறித்து பேசுகையில், "ஆசியாவின் செல்வத்தை உருவாக்கும் இயந்திரமாக இந்தியா உருவாகி வருகிறது. சீனா அதன் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் 25% சரிவைக் கண்டாலும், இந்தியா 29% அதிகரித்து, 334 கோடீஸ்வரர்கள் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது” என்று தெரிவித்தார்.