மும்பை படகு விபத்து.. உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்..
மும்பையில் கேட்வே ஆஃப் இந்தியா அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உறுதி செய்துள்ளார். இதில் உயிரிழந்தவர்களில் 10 பேர் பொதுமக்கள் எனவும், மூன்று பேர் கடற்படை வீரர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று மாலை 3.55 மணிக்கு பச்சர் தீவிக்கு(butcher island) அருகில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் கடற்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 ஹெலிகாப்டர்கள் மற்றும் 11 குழுக்கள் அடங்கிய மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் எத்தனை பேரை காணவில்லை என்பது குறித்த தகவல் நாளை காலை வெளியாகும் என்று முதலமைச்சர் தேவேந்திர ஃப்ட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் மற்றும் கடற்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலோர காவல்படையின் சிறிய ரக ரோந்து படகு, அதி வேகமாக சென்று பயணியர் படகு மீது மோதியதே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. எனினும் விரிவான விசாரணைக்கு பின்னரே விபத்துக்கு என்ன காரணம் என்பது தெரியவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More: நாடு முழுவதும் 10,000 வேளாண் உற்பத்தியாளர் அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டம்…!