மும்பை பேனர் விபத்து எதிரொலி!… சென்னையில் ஒருவாரம் கெடு!... மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!
Banner: மும்பையில் ராட்சத பேனர் விபத்தில் 14 பேர் உயிரிழந்ததையடுத்து, சென்னையில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்ற மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷணன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் வீசிய புழுதிப் புயல் காரணமாக மும்பையில் பெட்ரோல் பங்க் அருகே இருந்த ராட்சத பேனர் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள, 5,000த்துக்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள், பலகைகளால் விபத்து ஏற்பட்டு, உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது குறித்து, நம் நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள், பலகைகள் அனைத்தையும் அகற்றும்படி, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ராதாகிருஷ்ணன் கூறியதாவது, சென்னையில் மக்களுக்கு அச்சுறுத்துல் ஏற்படும் வகையில் உள்ள விளம்பர பதாகைகள், பலகைகள் அனைத்தையும் அகற்ற அறிவுறுத்தி உள்ளோம். மேலும், நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ள விளம்பர பதாகைகள், பலகைகளின் பாதுகாப்பு உறுதி தன்மையை ஆராயவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்தாண்டில் மே மாதம் வரை, 461 விளம்பர பதாகைகள், பலகைகள் அகற்றப்பட்டன. இம்மாதத்தில் இதுவரை, 53 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன என்று கூறினார்.
அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்றும்படி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, மாநகராட்சி மண்டல அலுவலங்கள் வாயிலாக, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பேனர்களை ஏழு நாட்களுக்குள் அகற்றாவிட்டால், மாநகராட்சியே அவற்றை அகற்றி விட்டு, அதற்கான செலவை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளது.
Readmore: அனல் பறக்கப் போகும் CSK, RCB மேட்ச்!! தலை விதியை மாற்றுமா ஆர்சிபி!!