மூக்கில் இருந்து அகற்றப்பட்ட புழுக்கள்...! உறவினர்கள் அதிர்ச்சி....
தாய்லாந்தில் ஒரு பெண்ணின் மூக்கில் இருந்து 100க்கும் மேற்பட்ட புழுக்கள் அகற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் வடக்கு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, கடந்த ஒரு வாரமாக மூக்கு அடைப்பு மற்றும் முக வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். பின்னர் அந்த பெண்ணின் மூக்கில் இருந்து திடீரென ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை சியாங் மாயில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், எக்ஸ்-ரே உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர். அப்போது, எக்ஸ்-ரேவை பரிசோதித்த மருத்துவர், பெண்ணின் மூக்கில் அசாதாரணமான ஒன்று இருப்பதை கண்டார். இதையடுத்து, அப்பெண்ணிற்கு எண்டோஸ்கோப்பிக் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், மூக்கின் உள்ளே புழுக்கள் நெளிந்தபடி இருப்பதை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதை தொடந்து, அப்பெண்ணுக்கு சிகிச்சையின் மூலம் மூக்கின் உள்ளே இருந்த 100-க்கும் மேற்பட்ட புழுக்களை மருத்துவர்கள் அகற்றினர். அதன் பின், அந்த பெண் நலமாக இருப்பதாகவும், நல்வாய்ப்பாக சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தால் அப்பெண்ணிற்கு மரணம் ஏற்பட கூட வாய்ப்பு இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சியாங் மாய் பகுதியில், ஒவ்வாமை மற்றும் நாசியழற்சி உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகளுக்கு அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.