'அனுசுயா To அனுகதிர் சூர்யா..' பாலினத்தையும், பெயரையும் மாற்றிக்கொண்ட IRS அதிகாரி!!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள, மத்திய கலால் வரி மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (செஸ்டாட்) மாநில இணை ஆணையராக நியமிக்கப்பட்டவர் பெண் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அனுசுயா. 2013-ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ் அதிகாரியான எம்.எஸ்.எம்.அனுசுயா, தன் பெயரையும், பாலினத்தையும் மாற்றக் கோரி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய வருவாய்த் துறையிடம் மனு அளித்திருக்கிறார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவில், "ஹைதராபாத்தில் உள்ள செஸ்டாட் தலைமை ஆணையர் (ஏஆர்) அலுவலகத்தில் தற்போது இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஆர்.எஸ் அதிகாரியான எம்.எஸ்.எம்.அனுசுயா, தனது பெயரை திருமதி எம்.அனுசுயா என்பதிலிருந்து திரு எம்.அனுகதிர் சூர்யா என்றும் பெண்ணிலிருந்து ஆண் பாலினமாக மாற்றக் கோரியிருக்கிறார். எம்.அனுசுயாவின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அனுசுயாவின் பாலினம் மற்றும் பெயரை மாற்றி திருமதி எம்.எஸ்.எம்.அனுசுயா என்பதிலிருந்து, திரு எம்.அனுகதிர் சூர்யா என அனைத்து அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இனி அவர் அதிகாரப்பூர்வமாக ஆண் சிவில் அதிகாரியாக கருதப்படுவார்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அனுசுயா கடந்த 2013-ல் சென்னையில் உதவி ஆணையராக தனது பணியை தொடங்கியுள்ளார். 2018-ல் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷனில் இளநிலை பட்டம் பயின்றவர். அதன் பின்னர் தேசிய சட்ட நிறுவன பல்கலைக்கழகத்தில் சைபர் சட்டம் மற்றும் சைபர் தடயவியல் முதுகலை பட்டய படிப்பு (டிப்ளோமா) பயின்றுள்ளார்.
ஏப்ரல் 15, 2014 அன்று NALSA வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில், 'மூன்றாம் பாலினத்தவர் மற்றும் பாலின அடையாளம் என்பது தனிப்பட்ட விருப்பம். பாலியல் தேர்வு நோக்குநிலை என்பது ஒரு தனிநபரின் நீடித்த உடல், காதல் அல்லது உணர்ச்சிப்பூர்வமான ஈர்ப்பைக் குறிக்கிறது. பாலியல் நோக்குநிலையில் திருநங்கைகள் மற்றும் பாலின-மாறுபட்ட நபர்களும் அடங்குவர். ஒருவர் பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை (SRS) க்கு உட்படுத்தப்படுகிறாரா இல்லையா என்பதை அவர்தான் முடிவு செய்யவேண்டும்" எனத் தீர்ப்பளித்தது. அதன் அடிப்படையில் அனுசுயாவின் மனு பரிசீலிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.