ரூ.100 கோடி வரை சம்பாதிக்கும் எம்.எஸ்.விஸ்வநாதனின் மகள்..!! அப்படி என்ன பிசினஸ் செய்கிறார் தெரியுமா..?
பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாலகாட்டில் பிறந்தவர். இவரை மெல்லிசை மன்னர், மெலோடி கிங், திரையிசை சக்கரவர்த்தி, இசை கடவுள் என்றெல்லாம் அழைப்பர். இவரும் ராமமூர்த்தியும் இணைந்து 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளனர். பின்னர் தனித்தனியே இசையமைத்த இருவரும் 29 ஆண்டுகள் கழித்து சத்யராஜின் படத்திற்காக மீண்டும் இணைந்து இசைமைத்தனர்.
எம்.எஸ். விஸ்வநாதனின் திறமையை பாராட்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவருக்கு 60 தங்க காசுகளையும், புதிய காரையும் பரிசாக அளித்து திரையிசை சக்கரவர்த்தி என்ற பட்டத்தையும் கொடுத்தார். விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் இணைந்து மேடை கச்சேரிகளை நிகழ்த்தினர். இசை கச்சேரிகளை நிகழ்த்திய முதல் இசையமைப்பாளர்கள் என்ற பெருமையும் இவர்களுக்கு உண்டு.
விஸ்வநாதன் ஜானகி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 மகன்கள், 3 மகள்கள். இவர்களில் லதா மோகன் என்ற மகள் ஸ்பலான் இண்டியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் அழகு நிலையங்களை இந்தியா முழுவதும் வைத்துள்ளார். பல்வேறு கிளைகளில் 450-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர் ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து லதா மோகன் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “அழகு கலையில் நான் மிகுந்த ஆர்வமாக இருந்ததால் இதை தொழிலாக செய்ய வேண்டும் என முடிவு செய்தேன். தொடக்கத்தில் இந்த தொழிலுக்கு அப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஏன் உனக்கு இந்த தேவையில்லா வேலை என கேட்டார். ஆனால், இதை நான் சவாலாக எடுத்துக் கொண்டு கன்யா என்ற பெயரில் முதல் அழகு நிலையத்தை தொடங்கினேன். நடிகை ஸ்ரீபிரியா எனது தோழி என்பதால் அவர்தான் எனது அழகு நிலையத்தை தொடங்கி வைத்தார்.
என் அம்மாவுக்கு கைராசி. அவர்தான் எனது கல்லா பெட்டியில் ரூ.1 போட்டார். ஆரம்பத்தில் எனது தொழிலில் பல சவால்களை நான் சந்தித்தாலும் என் அப்பா கூறிய அறிவுரைகளை கடைபிடித்தேன். வாடிக்கையாளர்களை ஏமாற்றாமல் தொழிலில் நேர்மை இருக்க வேண்டும் என்று அப்பா பொதுவாக கூறி வருவார். அதை நான் பின்பற்றினேன். இதனால் இன்று வெற்றிகரமான தொழிலதிபராகிவிட்டேன். நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட கிளைகள் எங்களுக்கு உள்ளன. எங்கள் நிறுவனம் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது” என்று தெரிவித்தார். ஆரம்ப காலத்தில் விஸ்வநாதன் தனது படங்களுக்கு வெறும் ரூ.100-ஐ ஊதியமாக பெற்ற நிலையில் அவருடைய மகளோ ஆண்டுக்கு ரூ.100 கோடி லாபம் ஈட்டி வருகிறார்.