நில மோசடி வழக்கு... மாஜி அமைச்சர் தம்பியை 2 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி...!
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை வாங்கல் போலீஸார் 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கரூர் மாவட்டம் வாங்கலை சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா என்பவருக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை சிபிசிஐடி போலீஸார் கடந்த மாதம் கரூரில் கைது செய்து குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
போலீஸார் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக நேற்று திருச்சி மத்திய சிறையில் இருந்து சேகரை அழைத்து வந்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வாங்கல் போலீஸார் விசாரணைக்கு 10 நாள் அனுமதி கேட்ட நிலையில் நீதிமன்றம் 2 நாள் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இந்த வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் எனக் கருதி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலை மறைவானார். தனக்கு முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் மனு தாக்கல் செய்தனர். ஆனால் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகியோரை கேரளா மாநிலம் திருச்சூரில் சிபிசிஐடி போலீஸார் ஜுலை 16-ம் தேதி கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமினில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.