தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு எம்பி பதவி..? பாஜகவில் ஐக்கியம்..? ஆந்திராவில் பரபரப்பு..!!
தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பாஜகவின் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள சிரஞ்சீவி, கடந்த 2008ஆம் ஆண்டு பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். ஆந்திராவில் காங்கிரஸ் - தெலுங்குதேசம் என்ற இருதுருவ அரசியல் இருந்த அந்த காலகட்டத்தில், இந்த கட்சி 2009ஆல் நடந்த ஒருங்கிணைந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆட்சிக்கனவுடன் வந்த அவரால் கட்சியை தொடர்ந்து நடத்த முடியவில்லை. எனவே அவர் கட்சியை சோனியா காந்தியுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் காங்கிரசில் இணைத்துக் கொண்டார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது 2012ஆம் ஆண்டு மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் பொறுப்பு சிரஞ்சீவிக்கு அளிக்கப்பட்டது. 2014 தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் பிரச்சார குழு தலைவராக சிரஞ்சீவி பொறுப்பில் இருந்தார். 2014 பொதுத்தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் தோல்வி அடைந்தது முதல் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி காணப்படுகிறார். மேலும், ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து ஜெகன்மோகன் ரெட்டி எழுச்சி பெற ஆரம்பித்தார். பின்னர் அரசியல் பேச்சையே சிரஞ்சீவி எடுப்பதில்லை.
தற்போது ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி - சந்திரபாபு நாயுடு என்ற இருமுனை அரசியல் உள்ளது. தற்போது ஜெகனின் தங்கை ஷர்மிளா காங்கிரஸ் தலைவரானதால் இது மும்முனை போட்டியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சிரஞ்சீவிக்கு மாநிலங்களவை எம்.பி. பதவியை பாஜக வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் இருந்து அவர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார் என்று ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சமீபத்தில் தான் மத்திய அரசு சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருதை அறிவித்தது. தெலுங்கு சினிமாவில் 40 ஆண்டுகளாக அவர் ஆற்றி வரும் சேவையை அங்கீகரித்து, அவருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. மேலும், ராமர் கோயில் விழாவிலும் சிரஞ்சீவி குடும்பத்தோடு கலந்துகொண்டார். எனவே, பாஜகவில் சிரஞ்சீவி இணைவார் என்ற தகவலும் தீயாய் பரவி வருகிறது.