CANCER| ஸ்மார்ட்ஃபோன் ஃபிளாஷ் மூலம் மகனின் அரிய வகை புற்றுநோயை கண்டறிந்த தாய் !
CANCER: இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்மணி தனது 3 மாத ஆண் குழந்தைக்கு ஏற்பட்ட அரிய வகை புற்றுநோயை(Retinoblastoma) செல்போன் ஃபிளாஷ் ஒளியை பயன்படுத்தி கண்டுபிடித்து இருக்கிறார்.
இங்கிலாந்து நாட்டின் கென்ட் கவுண்டியில் அமைந்துள்ள கில்லிங்ஹாம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சாரா ஹெட்ஜஸ்(Sarah Hedges). இவர் 2022 ஆம் வருடம் நவம்பர் மாதம் இரவில் உணவு சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது தனது 3 மாத கைக்குழந்தையான தாமஸின் கண்களில் பூனையின் கண்களை போன்று வெள்ளை நிறத்தில் பளபளப்பாக ஏதோ மிளிர்வது போன்று காணப்பட்டுள்ளது.
முதலில் அது வெளிச்சத்தின் எதிரொளியால் ஏற்பட்டதாக நினைத்திருக்கிறார். எனினும் அவருக்கு இது தொடர்பாக சந்தேகம் இருந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தனது மகனின் கண்களை செல்போன் கேமராவின் மூலம் படம் பிடித்துள்ளார். இதன் பிறகு செல்போன் கேமராவின் ஃபிளாஷ் ஒளியை ஆன் செய்தும் புகைப்படம் எடுத்திருக்கிறார். இரண்டு புகைப்படங்களையும் ஒப்பிட்டு பார்த்தபோது அதில் சிறிய வித்தியாசம் இருந்திருக்கிறது.
இதனால் மேலும் சந்தேகம் அடைந்த அவர் தனது மகனை வீட்டின் அறையின் வெவ்வேறு இடங்களில் வைத்து வெவ்வேறான வெளிச்சத்துடன் ஃபிளாஷ் லைட்டில் புகைப்படம் எடுத்துள்ளார். இப்போது அவனது கண்களில் அந்த வெள்ளை நிற பளபளப்பு தெரிந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து எடுத்த புகைப்படங்களை வைத்து இன்டர்நெட்டில் சுயமாக ஆய்வு செய்து பார்த்தபோது இந்த பாதிப்பு அரிய வகை புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என தகவல் கிடைத்திருக்கிறது.
இதுகுறித்து தனக்கு தெரிந்த மருத்துவரிடம் சாரா விளக்கம் கேட்டிருக்கிறார். அந்த மருத்துவர் குழந்தையை மெட்வே மருத்துவமனையில் பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் குழந்தை தாமஸுக்கு பரிசோதனை செய்து பார்த்தபோது அரிய வகை புற்றுநோயான ரெட்டினோபிளாஸ்டோமா(Retinoblastoma) என்ற புற்றுநோய் இருப்பது உறுதியானது. இதனைக் கேட்ட சாராவின் உலகமே இருண்டு போனது.
எனினும் அவர் நம்பிக்கையுடன் இருந்தார் . குழந்தை தாமஸின் புற்று நோய்க்கு(Cancer) எதிரான போராட்டம் 2022 ஆம் வருடம் நவம்பர் மாதம் தொடங்கியது. மருத்துவர்கள் 6 கீமோதெரபி சிகிச்சைகள் கொடுப்பதற்கு பரிந்துரைத்தனர். குழந்தை தாமஸின் 6-வது கீமோதெரபி சிகிச்சை ஏப்ரல் 6 2023 இல் முடிவடைந்தது. தற்போது தாமஸ் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவரது தாய் சாரா தெரிவித்திருக்கிறார்.
எத்தனையோ சவால்களை சந்தித்த போதும் குழந்தை தாமஸ் உறுதியுடனும் வாழ்க்கையின் மீதான ஆர்வத்துடனும் இத்தனை கஷ்டங்களையும் கடந்து வந்ததாக தெரிவித்திருக்கிறார். தற்போது நிம்மதி மற்றும் சந்தோஷத்துடன் இருப்பதாக கூறியவர் தாமஸ் தனது சகோதரர்களுடன் முரட்டுத்தனமாக விளையாடுவதாகவும் தெரிவித்துள்ளார். குழந்தை பருவ புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் விழிப்புணர்வு பற்றிய முக்கியத்துவத்தை சாரா பகிர்ந்து கொண்டார்.
குழந்தை பருவ கண் புற்றுநோய் அறக்கட்டளை (CHECT) போன்ற நிறுவனங்கள் தாமஸின் கண்ணில் உள்ள வெள்ளைப் பளபளப்பு போன்ற நுட்பமான அறிகுறிகளை கண்டறிவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டுகின்றன. தாமஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது குறித்து விரைவாக கண்டறிந்து சிகிச்சை வழங்கியது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது பிரகாசமான மற்றும் புற்றுநோய் இல்லாத எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளிக்கிறது.