முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழகம் முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியிடங்கள்... உடனே நிரப்ப வேண்டும்...!

More than 5,000 medical posts across Tamil Nadu... need to be filled immediately
06:30 PM Nov 07, 2024 IST | Vignesh
Advertisement

அரசு மருத்துவமனைகளில் உள்ள அனுமதிக்கப்பட்ட மருத்துவப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நோயாளி, மருத்துவர், மருந்து, நோயாளியின் அருகில் இருக்க வேண்டிய துணை என நான்கும் சேர்ந்ததுதான் மருத்துவம் என்கிறார் திருவள்ளுவர். இந்த நான்கிலே மிக முக்கியமானதாக விளங்குவது மருத்துவர். ஆனால், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவி வருவதன் காரணமாக 'மருத்துவம் இல்லை' என்ற அபாயகரமான நிலையை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்த நிலை மாறி, இன்று பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதுபோல், மருத்துவமனைகளிலும் மருத்துவர்களின் பற்றாக்குறை நிலவி வருகிறது. அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி நான் பலமுறை அறிக்கைகள் விடுத்தும், அதை தி.மு.க. அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 18,000 மருத்துவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 5,000-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், தற்போது பணியில் உள்ள 1,000 மருத்துவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர உள்ளதால், பற்றாக்குறை மருத்துவர்களின் எண்ணிக்கை 6,000-ஆக அதிகரிக்கக்கூடும் என்றும், இந்த ஆண்டு ஓய்வுபெறும் மருத்துவர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என்றும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவிக்கிறது.

மருத்துவர்கள் இல்லாததன் காரணமாக நோயாளிகளுக்கு உரிய, தரமான, உடனடி மருத்துவம் அளிக்கப்படுவதில்லை. மருத்துவ ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக மருத்துவ மாணவர்களின் கல்வித் தரம் பாதிக் பாதிக்கப்படுகிறது. பதவி உயர்வு, ஊதிய உயர்வு இல்லாமல் மருத்துவர்கள் பாதிக்கப்படுகிறார்கள், சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது என்பது மக்களின் உயிரோடு விளையாடுவதற்குச் சமம். முதல்வர் ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசு மருத்துவமனைகளில் உள்ள அனுமதிக்கப்பட்ட மருத்துவப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், மருத்துவர்களுக்கான பதவி உயர்வினை அளிக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Tags :
ADMKMedical jobmk stalinOPStn government
Advertisement
Next Article