சென்னையில் பரபரப்பு...! அரசுப் பேருந்துகளை சிறை இன்றும் 150-க்கும் மேற்பட்டோர் போராட்டம்...!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், மீண்டும் அரசுப் பேருந்துகளை சிறைப்பிடித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதையடுத்து, தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே கிளம்ப வேண்டும் உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலையமும் மூடப்பட்டதால் பயணிகள் கடும் சிரமங்களுடன் கிளாம்பாக்கம் சென்று, பின்னர் அங்கிருந்து முன்பதிவு செய்த பேருந்துகளில் பயணித்து வருகின்றனர்.
10, 11 தேதிகளில் முகூர்த்தம் மற்றும் வார கடைசி நாட்கள் என்பதால் நேற்று முன்தினம் முதல் சென்னையில் இருந்தும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதைக் கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் நாளை வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.
இந்நிலையில் நேற்றிரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால், போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் திடீரென சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 300க்கும் மேற்பட்ட பயணிகள், போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் கேட்ட போது முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், மீண்டும் அரசுப் பேருந்துகளை சிறைப்பிடித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்றும் 150க்கும் மேற்பட்டோர் போராட்டம். போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர்.