மத்திய அரசின் அசத்தல் திட்டம்...! முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ரூ.20,000 வரை மாத ஓய்வூதியம்...!
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்களை ஊக்கப்படுத்த பல்வேறு திட்டங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசு நிதியுதவி அளித்து வருகிறது.
இது குறித்து பதிலளித்த மத்திய இளைஞர் நலன், விளையாட்டுக்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், கேலோ இந்தியா மையங்கள், விளையாட்டு கல்விக் கழகங்கள் ஆகியவை அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6.28 லட்சம் (கைச்செலவு பணமாக ரூ.1.20 லட்சம் உட்பட) நிதியுதவி வழங்கப்படுகிறது. 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இதுவரை 1059 கேலோ இந்தியா மையங்களுக்கு 918 கடந்த கால சாம்பியன் பட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
ஒலிம்பிக் மேடை இலக்குத் திட்டத்தின் கீழ் 174 வீரர்கள் / வீராங்கனைகளும், 2 ஹாக்கி அணிகளும் தேர்வு செய்யப்பட்டு, ஒலிம்பிக் செல் இயக்கத்தால் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில் முக்கியமான அணி வீரர்களுக்கு கைச்செலவுக்காக மாதத்திற்கு ரூ.50,000 வழங்குவதோடு, அவர்களின் பயிற்சி செலவு முழுவதும் ஏற்கப்படுகிறது. இதே போல் தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் நிதித் திட்டத்தின் கீழ் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவும், தேசிய, சர்வதேச சாம்பியன் பட்ட போட்டிகளை நடத்தவும், வெளிநாட்டு பயிற்சியாளர்களை பயிற்சிக்கு ஈடுபடுத்தவும் நிதியுதவி வழங்கப்படுகிறது.
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய நல நிதிய திட்டத்தின் கீழ் ஏழ்மை சூழ்நிலையில் வசிக்கும் விளையாட்டு வீரர்களின் பயிற்சி, விளையாட்டு சாதனங்கள் வாங்குதல், தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றல் ஆகியவற்றுக்கு நேரடியாக ரூ.2.50 லட்சம் வரை அரசு நிதியுதவி வழங்குகிறது. தகுதி வாய்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ. 12,000 முதல் ரூ.20,000 வரை மாத ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் ரொக்கப்பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.20,000 முதல் ரூ.75 லட்சம் வரை வழங்கப்படுகிறது என்றார்.