மழைக்காலப் பூஞ்சை!… கட்டடங்களுக்கு என்ன பாதிப்பு?… உடலுக்கு என்ன சிக்கல்?
பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழ்நாடு முழுவதும் சில நாட்களாக பரவலாக விடாமல் தூருகிறது மழை. மழைக்காலம் சிலருக்கு, சில வேளைகளில் குதூகலத்தைத் தரும். அதே நேரம் விடாத மழைக்காலம் சில சில்லரைத் தொல்லைகள் முதல் பெரிய சிக்கல்கள் வரை கொண்டுவரும். அவற்றில் ஒன்று பூஞ்சைகள். மழை வெள்ளம், குடிசைகளை, மண் வீடுகளை உடனடி ஆபத்துக்குள்ளாக்கக்கூடியது. ஆனால், அடைமழை என்று வரும்போது நன்கு கட்டப்பட்ட வலுவான சிமெண்ட் வீடுகளிலேயே அது சில சிக்கல்களைத் தோற்றுவிக்கும். அப்படி ஏற்படும் மழையால் கட்டடங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் ஒன்றான பூஞ்சைகள், உடல் நல சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடியவை.
இது என்ன விதமான கட்டுமானச் சிக்கல்களைக் கொண்டுவரும்: கட்டடங்களின் வெளிப்புறங்களில், குறிப்பாக சுவர்கள், சன்ஷேடுகள், முகப்பு அலங்காரங்கள் போன்ற இடங்கள் தொடர்ந்து மழையால் ஈரமாக இருக்கும்போது அந்த இடங்களில் பச்சை நிறத்தில் பாசி தோன்றும். பிறகு இந்தப் பாசி நாள்பட நாள்பட கருப்பாக மாறும். இந்தக் கருத்த பாசிகள் பிறகு காய்ந்து பட்டையாக உதிரும். இப்படி நடக்கும்போது சுவர்களின் சிமெண்ட் பூச்சின் மேற்பரப்பு அதன் உறுதியை இழக்கும். சில இடங்களில் சிமெண்ட் உதிரத் தொடங்கும். சுவர்களில், சுவர் விரிசல்களில் ஈரப்பதத்தால் பூஞ்சை வளரும்போது அந்த இடங்களில் ஈரப்பதம் நீடித்து நின்று, அங்கே சிறு செடிகள் முளைக்க வழி ஏற்படுத்திக்கொடுக்கும்.
சன்ஷேட், மொட்டை மாடி போன்ற இடங்களில் தண்ணீர் வெளியேறும் குழாய்கள் மழைக்காலத்தில் அடைத்துக்கொள்வதால் பூஞ்சை பிடிக்கும் வாய்ப்பு அதிகம். எனவே, இதனை கவனித்து தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். இல்லாவிட்டால், இது காலப்போக்கில் பராமரிப்பு செலவுகளை ஏற்படுத்திவிடும். இதனைத் தவிர்ப்பதற்கு தற்காலத்தில் ஆன்டி ஃபங்கல் எமுல்ஷன் பெயிண்டுகள் என்ற பூஞ்சை எதிர்ப்பு பெயிண்டுகள் எல்லா பிராண்டுகளாலும் சந்தைப்படுத்தப்படுகின்றன. சந்தையில் உள்ள பெரும்பாலான வெதர் புரூஃப் பெயிண்டுகளும் பூஞ்சை எதிர்ப்பு குணங்களையும் கொண்டுள்ளன. இவற்றை சுவர்களில் அடிப்பதன் மூலம் சுவர்களில் பூஞ்சை படர்வதைத் தவிர்க்கலாம். அதே நேரம், வீட்டுக்கு உள்ளே உள்ள சுவர்களில், மர சாமான்களில் மழைக்காலத்தில் காற்றோட்டம், வெயில் படும் வாய்ப்பு குறைவதால் வெள்ளை நிறத்தில் லேசான பூஞ்சை படரும். இவற்றை சோப் ஆயில் கொண்டு ஈரப்படுத்திய ஸ்பாஞ்சால் துடைத்தால் அதுவே போதுமானது.
மழைக்காலப் பூஞ்சைகளால் ஏற்படும் உடல் நலப்பாதிப்புகள்: மழைக்காலத்தில் துணிகளை சரிவர துவைத்து காயவைக்க முடியாது என்பதால் பிறப்புறுப்பு போன்ற பகுதிகளில் பூஞ்சைத் தொற்று ஏற்படலாம். இது மிக எளிதாக குணப்படுத்தக்கூடியது. ரொட்டி போன்ற உணவுப் பொருள்களில் மழைக் காலத்தில் மிக எளிதில் பூஞ்சை படரும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, இத்தகைய உணவுகளை தயாரித்த இரண்டு நாளுக்குள் உண்பது நலம். மழைக்காலத்தில் வெளியில் சென்று வந்து சோப்புப் போட்டு கை கால்களை கழுவுவதால் சேற்றுப் புண் போன்ற சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
மழைக்காலப் பூஞ்சைகள் கோவிட் சமயத்தில் ஏற்பட்ட பூஞ்சை நோய் போன்ற எதையும் பொதுவாக தோற்றுவிப்பது இல்லை. இந்த மழைக்காலப் பூஞ்சைகள் உயிராபத்தை விளைவிக்காதவை என்பதால் பொது சுகாதார சிக்கல்களில் இவை முக்கியமானவையாக இல்லை. வாந்தி பேதி, காலரா, வயிற்றுப்போக்கு, டெங்கு, மலேரியா, மஞ்சள் காமாலை போன்றவையே மழை தொடர்பாக ஏற்பட சாத்தியமுள்ள மிக முக்கியமான பொது சுகாதார இடர்பாடுகள் ஆகும். வீட்டில் சுவர்களில் படரும் பூஞ்சை எந்த வகையை சேர்ந்தவை என்பதைப் பொறுத்து, குறிப்பிட்ட நபர்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பொறுத்து, ஒவ்வாமை, சுவாசக் கோளாறுகள் முதல் அரிதாக புற்றுநோய்வரை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சைகள் உள்ளன. எனவே வீடுகளில் பூஞ்சைகள் இன்றி பராமரிக்கவேண்டும்,