தமிழகம் முழுவதும் அக். 15-ல் சிறப்பு மருத்துவ முகாம்!. பருவமழை முன்னேற்பாடுகள் தீவிரம்!. அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
Medical Camp: பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 15ம் தேதி 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
பருவமழை தொடக்கத்திற்கு முன்னரே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பலி எண்ணிக்கையும் உயர்ந்தது. தென்னிந்தியாவிலும் பல்வேறு இடங்களில் மழை கொட்டித்தீர்த்தது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் குறைவான மழையே பெய்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை தொடர்ந்ததும் அதிக அளவு மழை பெய்யும் என்று கணிக்கப்படுகிறது. ஆகையால் பாதிப்பும் அதிகமாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
ஆனால் கடந்த சில ஆண்டிலிருந்து இந்த பருவமழையில் தீவிரமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக 3 மாதங்கள் வரை நின்று பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் மொத்தமாக கொட்டிவிடுகிறது. இதனால் எதிர்ப்பாராத வெள்ளம் மற்றும் பாதிப்புகள், பொருள் இழப்பையும் ஏற்படுத்திவிடுகிறது. கடந்தாண்டு சென்னையில் பாதிப்புகள் ஏற்பட்டதைபோல தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை பருவமழையால் அதிகளவு பாதிப்புகள் ஏற்பட்டது.
இந்தநிலையில், வரும் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழைக் காலங்களில் கொசுக்களால் காய்ச்சல் பரவல் அதிகரிக்கும். அந்தவகையில், சென்னை கிண்டி அரிமா சங்க பள்ளி வளாகத்தில் 324கே மாவட்ட அரிமா சங்கம் மற்றும் அப்போலோ மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இலவச இதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாமினை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. இதுவரை 7 இறப்புகள் ஏற்பட்டுள்ளது. அதுவும் சுயசிகிச்சை எடுத்துக்கொண்டதால் தான் இந்த இறப்பு ஏற்பட்டதாக விளக்கமளித்துள்ளார். மேலும், பருவமழை காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 15ம் தேதி 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 100 இடங்களிலும் தமிழகத்தில் உள்ள மற்ற இடங்களில் 900 மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார்.