நிர்பந்தத்தால் விருப்ப ஓய்வா? ; முன்னால் எஸ்.பி வீடியோ வெளியிட்டு விளக்கம்!!
விஷச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கையில் கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தம் காரணமாகவே, மோகன்ராஜ் விருப்ப ஓய்வுபெற்றதாக விமர்சனம் எழுந்த நிலையில், அதற்கான காரணத்தை விளக்கி, அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம், தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டு இருக்கிறது. இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் மேலும் உயர்ந்துவிடக்கூடாது என்ற அச்சமே நிலவுகிறது. கிட்டத்தட்ட100-0க்கும் மேற்பட்டோர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மறுபுறம், கள்ளச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், விஷச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கையில் கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தம் காரணமாகவே, கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் எஸ்.பி. மோகன்ராஜ் விருப்ப ஓய்வுபெற்றதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிவிட்டிருந்தார்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளான நிலையில், மோகன்ராஜ், தாம் விருப்ப ஓய்வுபெற்றதற்கான காரணத்தை விளக்கி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”அமெரிக்காவில் உள்ள எனது மகள் மற்றும் மருமகளின் பிரசவத்தை கவனித்து கொள்வதற்காக எனது மனைவியுடன், நான் அங்கு செல்ல வேண்டி இருந்ததால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விருப்ப ஓய்வு பெற்றேன். ஆனால், எனது இந்த முடிவு குறித்து கள்ளக்குறிச்சி துயர சம்பவத்துடன் தொடர்புபடுத்தி தற்போது சிலர் சமூக வலைதளங்களில் தவறான விரும்பத்தகாத தகவலை பரப்பி வருகின்றனர்” என அதில் தெரிவித்துள்ளார்.
Read more ; கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் : பலி எண்ணிக்கை 54 ஆக உயர்வு!!