3வது முறையாக பிரதமராக நாளை பதவியேற்கும் மோடி!! இப்போதே கொண்டாட்டத்தை தொடங்கிய பாஜக!!
ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்துள்ள நிலையில் நாளை(ஜூன் 9) ஆம் தேதி பதவியேற்கிறார் பிரதமர் மோடி.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 293 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றியது. இதில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உதவியுடன் பாஜக ஆட்சி கட்டிலில் அமர்கிறது.
டெல்லியில் என்டிஏ கூட்டணியின் தலைவர்கள் மற்றும் எம்பிக்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவை தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதேபோல பாஜக மற்றும் என்டிஏ கூட்டணியின் தலைவராகவும் மோடி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவரை சந்தித்த மோடி, என்டிஏ கூட்டணிக்கு ஆதரவளிக்கும் எம்பிக்களின் பட்டியலை கொடுத்து, ஆட்சியமைக்க பாஜக உரிமை கோரினார். இந்நிலையில் ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மோடிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். எனவே வரும் நாளை மாலை நரேந்திர மோடி பிரதமராக மீண்டும் பதவியேற்கிறார். முன்னதாக இந்த கூட்டத்தில் பேசிய மோடி, "தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாளில் நான் பிசியாக இருந்தேன். பின்னர் எனக்கு தொலைப்பேசி அழைப்புகள் வர தொடங்கின. பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்கிற தகவலும் வந்தது. இது ஒரு விஷயத்தை உணர்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தேர்தல் ஆணையம் மற்றும் ஈவிஎம் இயந்திரம் குறித்து எழுப்பப்பட்டிருந்த விமர்சனங்கள் இந்த முடிவுகள் மூலம் அமைதியடைந்துள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்பவர்கள் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமைதி காக்கப்பட்டதுதான் இந்திய ஜனநாயகத்தின் சக்தி. அடுத்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நல்லாட்சி, வளர்ச்சி, சாதாரண குடிமக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், இது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மிகப்பெரிய வெற்றி என்று உலகமே நம்புகிறது" என்று கூறினார்.