சூடு பிடிக்கும் அரசியல்...! பிப்ரவரி மாதம் 2-ம் வாரம் மீண்டும் சென்னை வரும் மோடி...! அண்ணாமலை கொடுத்த அப்டேட்...!
பிப்ரவரி மாதம் 2-ம் வாரம் நிறைவடையும் என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் பிரதமர் பங்கேற்க உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ன் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்து கொண்டு போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் சென்னை கிண்டி ராஜ்பவனில் இரவு தங்கினார். அவரை, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிப்ரவரி மாதம் 2-ம் வாரம் நிறைவடையும் என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் பிரதமர் பங்கேற்க உள்ளார். தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளில் முதன்முறையாக வாக்களிக்க உள்ளோருடன் பிரதமர் பேச உள்ளார். வாக்களிக்க உள்ளவர்களுடன் வரும் 25-ம் தேதி காணொலியில் பிரதமர் கலந்துரையாடுகிறார் என கூறினார்.
பிரதமர் இன்று திருச்சி பயணம்:
இன்று காலை திருச்சி செல்லும் பிரதமர் மோடி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கிறார். பின்னர், ராமேசுவரம் சென்று ராமநாத சுவாமி கோயிலில் வழிபாடு செய்கிறார். இன்று இரவு ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார். நாளை காலை ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனிதநீராடும் பிரதமர் மோடி,பின்னர் தனுஷ் கோடி அரிச்சல் முனையில் உள்ள கோதண்டராமர் கோயிலில் நடைபெறும் பூஜையில் பங்கேற்ற பிறகு, டெல்லி திரும்புகிறார்.