PMO Modi | "மோடி தான் பாஜகவின் நிரந்தர பிரதமர்.." அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித் ஷா பதிலடி.!!
PMO Modi: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் பொது தேர்தல் வாக்குப்பதிவில் தமிழகம் பாண்டிச்சேரி மற்றும் கேரளா உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 3 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்து இருக்கிறது. ஆந்திரா தெலுங்கானா பீகார் உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வருகின்ற மே 13 ஆம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் மதுபான கொள்கையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி இருக்கிறது. ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் டெல்லி வாக்குப்பதிவில் ஆம் ஆத்மி கட்சிக்காக பிரச்சாரம் செய்வதற்கு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு ஜூன் 2-ஆம் தேதி சரணடைய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து திகார் ஜெயிலிலிருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது வருகின்ற செப்டம்பர் மாதத்தோடு பிரதமர் மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என அறிவித்த அவர் பாஜகவின் அடுத்த பிரதமர் யார் என்றும் கேள்வி எழுப்பினார். பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் 75 வயதோடு அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என மோடி அறிவித்தார். வருகின்ற செப்டம்பர் மாதத்தோடு பிரதமர் மோடிக்கு 75 வயது ஆகிறது.
அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோசி போன்ற பாஜக தலைவர்கள் 75 வயதோடு ஓய்வு பெற்றனர். அதேபோன்று மோடியும் ஓய்வு பெற்றால் அடுத்த பிரதமர் யார்.? என அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி இருக்கிறார். மோடி(PMO Modi) ஓய்வு பெறுவதால் அமித் ஷாவிற்காக வாக்கு கேட்கிறாரா.? எனவும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் எழுப்பிய கேள்விகளுக்கு அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஹைதராபாத்தில் பேசிய அமித் ஷா மோடிக்கு 75 வயதானாலும் அவரை நாங்கள் மாற்ற மாட்டோம். இதை தெளிவாக கூறுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் கெஜ்ரிவாலுக்கு கிடைத்துள்ள இடைக்கால ஜாமீன் பற்றி பேசிய அமித் ஷா " அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு விடுதலை கிடைத்தது போல் நினைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு கிடைத்திருப்பது இடைக்கால ஜாமீன் மட்டுமே. இது அவருக்கு தெரியவில்லை என்றால் அவரது சட்ட அறிவு பலகீனமாக இருக்கிறது" எனவும் குறிப்பிட்டுள்ளார்.