Election Breaking | 'மோடி ராஜினாமா செய்ய வேண்டும்' - காங்கிரஸ் வலியுறுத்தல்!!
மக்களவைத் தேர்தலில் பாஜகவின் செயல்திறனுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 44 நாட்களில் அடுத்தடுத்த கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத் மாநிலம் சூரத்தில் மட்டும் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மீதமுள்ள 542 தொகுதிகளில் பாஜக கூட்டணி, I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் பிறக்கட்சியைச் சேர்ந்தவர்கள் களம் கண்டனர். 64 கோடியே 20 லட்சம் பேர் ஜனநாயக கடமையாற்றியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில் 543 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக 295 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமரைத் தாக்கி, காங்கிரஸ் பொதுச்செயலாளர், தகவல் தொடர்புச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், X இல் பதிவிட்ட பதிவில், “அவர் தன்னை அசாதாரணமானவர் என்று காட்டிக் கொண்டார். தற்போது பதவி விலகும் பிரதமர் முன்னாள் பிரதமராக மாறப்போகிறார் என்பது நிரூபணமாகியுள்ளது. தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்யுங்கள்.
2016ல் உ.பி.யின் மொராதாபாத்தில் பிரதமர் கூறியதை நினைவு கூர்ந்த அவர், “வெளியேறும் பிரதமர் நரேந்திர, 'அவர்கள் (எதிர்க்கட்சிகள்) என்னை என்ன செய்ய முடியும்? நான் ஒரு ஃபக்கீர், நான் என் பையை எடுத்துக்கொண்டு கிளம்புவேன். பதவி விலகும் பிரதமரே, உங்களின் இந்தக் கூற்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? நேரம் வந்துவிட்டது. உங்கள் பையை எடுத்துக்கொண்டு இமயமலை நோக்கிச் செல்லுங்கள். இதே கருத்தை எதிரொலிக்கும் வகையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட், பிரதமர் பதவிக்கான வேட்புமனுவில் இருந்து மோடி தனது பெயரை திரும்பப் பெற வேண்டும் என்றார்.