மோடியா? ராகுலா? இன்று நடைபெறும் எந்த கூட்டத்தில் பங்கேற்க போகிறார் நிதிஷ்குமார்??
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இன்று காலை 11.30 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் கலந்து கொள்ளும் எனத் தெரிகிறது.
400 இடங்களை வெல்வோம் என்ற கோஷத்துடன் பிரசாரத்தை தொடங்கிய பாஜகவிற்கு மக்களவை தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளன. தனி மெஜாரிட்டி பெற முடியாமல் கூட்டணி ஆட்சியையே பாஜக இந்த முறை அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளை நம்பியே ஆட்சி அமைக்க வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. மறுபக்கம் இன்று இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்த உள்ளன. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய ஆலோசனைகளும் ஆட்சி அமைப்பது தொடர்பாக வியூகம் அமைக்க போவதாக காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இன்று காலை 11.30 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவது உள்ளிட்டவை தொடர்பாக முடிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இன்று நடைபெறும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் கலந்து கொள்ளும் எனத் தெரிகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் தற்போது கிங் மேக்கர்களாக உருவெடுத்துள்ளனர். இதன் காரணமாக இன்று நடைபெற இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.