'மோடி.. மோடி’..!! முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கோஷமிட்ட பாஜகவினர்..!! திருச்சியில் பரபரப்பு..!!
திருச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்ட விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச வரும்போது, பாஜகவினர் 'மோடி, மோடி' என கூச்சலிட்டனர். அப்போது பிரதமர் மோடி, அமைதியாக இருங்கள் என கையால் செய்கை செய்தார். இதையடுத்து பாஜகவினர் கோஷத்தை நிறுத்தினர்.
தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இன்று கலந்துகொண்டார். தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் உட்பட 20,140 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் முக.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச எழுந்ததுமே நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜகவினர், ‛மோடி.. மோடி..' என இடைவிடாது கோஷமிட்டனர். இதனால் முதல்வர் ஸ்டாலின் சில வினாடிகள் அப்படியே மைக் முன்பு பேசாமல் நின்றார். பின்னர் பேச தொடங்கியபோதும் ’மோடி.. மோடி..’ என்ற பாஜகவினர் கோஷம் தொடர்ந்து ஒலித்தது. இதனால் ஸ்டாலின் பேசுவது சரியாக கேட்காத நிலை ஏற்பட்டது. இதனைக் கவனித்த பிரதமர் மோடி, மேடையில் இருக்கையில் இருந்தபடியே கோஷத்தை நிறுத்தும்படி தனது கையை அசைத்து சைகை செய்தார். இதையடுத்து படிப்படியாக ‛மோடி.. மோடி' கோஷம் நின்றது.
அதன்பிறகு தமிழகத்தின் பெருமைகளைப் பற்றி முதல்வர் முக.ஸ்டாலின் பேசும்போது நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுகவினர் ‛ஸ்டாலின்.. ஸ்டாலின்..' என கோஷமிட்டனர். இதையடுத்து மீண்டும் பாஜகவினர் ‛மோடி.. மோடி' என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.