மீண்டும் பிரதமராக மோடி..!! தனது கை விரலை வெட்டி காணிக்கை செலுத்திய பாஜக நிர்வாகி..!!
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக வெற்றி பெற வேண்டி கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவர் தனது கை விரலை வெட்டி காளி தேவிக்கு காணிக்கையாக செலுத்தியுள்ளார்.
கர்நாடக மாநிலம் சோனார்வாடாவைச் சேர்ந்தவர் அருண் வெர்னேகர் (50). தீவிர பாஜக தொண்டரான இவர், மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொண்டு காளி தெய்வத்துக்கு ரத்தக் காணிக்கை அளிக்க நினைத்துள்ளார். அந்தவகையில், அருண் வெர்னேகர் நேற்று முன்தினம் திடீரென தனது ஆள்காட்டி விரலை வெட்டி காளி தேவிக்கு காணிக்கையாக செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "மோடி மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக காளி மாதாவை வேண்டிக் கொண்டேன். மேலும், எனது ஆள்காட்டி விரலை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினேன். மோடி என் தலைவர்” என்று குறிப்பிட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் அவரது விரலை மீண்டும் ஒட்டவைக்க முடியாதென மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதற்கிடையே, இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என மக்களுக்கு பாஜக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.