Lok Sabha Election: "மோடியும், அமித் ஷாவும் நாட்டை கூறு போட்டு விற்று விட்டார்கள்.." மல்லிகார்ஜுனா கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு.!
Lok Sabha: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஏழு கட்டங்களாக நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்கு பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
கேரளா கர்நாடகா உட்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 பாராளுமன்ற தொகுதியில் இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நடைபெற இருக்கிறது. நாளை மறுநாள் வாக்குப்பதிவை முன்னிட்டு தேர்தல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் இந்தியாவை கூறு போட்டு விற்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
வருகின்ற மே மாதம் 7-ஆம் தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில்(Lok Sabha) மூன்றாம் கட்ட வாக்குப் பதிவில் மல்லிகார்ஜுனா கார்கேயின் மருமகன் ராதாகிருஷ்ண தொட்டாமணி கலபுர்கி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மல்லிகார்ஜுனா கார்கே மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் இல்லாத விஷயங்களை இட்டுக்கட்டி குற்றம் சுமத்தி வருவதாக கூறிய கார்கே காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி தொடர்பாக மோடியுடன் நேரடியாக விவாதிக்க தயார் என சவால் விட்டிருக்கிறார். மேலும் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் அரசு நிறுவனங்களை மோடியும் அமித் ஷாவும் அம்பானி மற்றும் அதானிக்கு விற்று வருவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். மோடி அம்பானி மற்றும் அதானிக்காகத்தான் உயிர் வாழ்கிறார் எனவும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கார்கே தெரிவித்துள்ளார்.