இந்த மாதமே பணிகளை முடிக்க வேண்டும்... மின் அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு...!
மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும்போது பில்லர் பெட்டிகள் பழுதடைவதை தடுக்கும் வகையில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலங்களில் பில்லர் பெட்டிகள் தரை மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் உயரத்த அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை மற்றும் எதிர்வரும் கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டல அனைத்து பொறியாளர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆய்வின்போது, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலங்களில், 30 நிமிடங்களுக்கு மேல் மின் தடங்கல் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து ஒவ்வொரு பிரிவு அலுவலரிடமும் அதற்கான காரணத்தை கேட்டறிந்த அமைச்சர், தொடர்ச்சியாக மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி காரணத்தை கண்டறிந்து உடனடியாக சரிசெய்வதற்கு உத்தரவிட்டார்.
மேலும், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும்போது பில்லர் பெட்டிகள் பழுதடைவதை தடுக்கும் வகையில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலங்களில் இதுவரை 6,024 பில்லர் பெட்டிகள் தரை மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் உயரத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், 503 பில்லர் பெட்டிகளை உயர்த்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை, இம்மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளார்.