அதானியுடன் எந்த வணிக தொடர்பும் இல்லை..!!- அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
அதானி நிறுவனத்திற்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சூரிய ஓளி மின்சார ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, இந்திய அதிகாரிகளுக்கு தொழிலதிபர் அதானி 25 கோடி டாலர்கள் லஞ்சமாக கொடுத்து இருப்பதாகவும், அதனை மறைத்து அமெரிக்க முதலீடுகளைப் பெற்று மிகப்பெரிய மோசடியை செய்திருப்பதாக நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதானியை கைது செய்ய வேண்டும் என்றும், பார்லிமென்ட் கூட்டு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில் தான் தமிழ்நாடு மின்சார வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செந்தில் பாலாஜி கூறியதாவது:-
அதானி நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகளில் பல மாநிலங்கள் சேர்க்கப்பட்டிருந்தன. அதில் தமிழ்நாடு மின்சாரத்துறையும் சேர்க்கப்பட்டு சில கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன. தமிழ்நாடு மின்சார வாரியத்தை பொறுத்தவரை அதானி நிறுவனத்தோடு எந்த விதமான வணிக ரீதியிலான தொடர்பும் கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொள்ளப்படவில்லை என்பதை முதலில் சொல்லிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். பா.ஜ.,வின் இந்தக் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்ததோடு, கடந்த 3 ஆண்டுகளில் அதானி குழுமத்துடன் தமிழக அரசு எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.
Read more ; ஜியோ, ஏர்டெல்-க்கு செக் வைத்த எலான் மஸ்க்.. விரைவில் நாடு முழுவதும் ஸ்டார்லிங்க் சேவை..!!