பரபரப்பு... அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில் 12-ம் தேதி வரும் முக்கிய தீர்ப்பு...!
கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி, குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்து, இதுதொடர்பாக பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த விளக்க மனுவின் நகல் கோரி, அமைச்சர் பொன்முடி, அவர் மனைவி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுவை விசாரித்த நீதிபதி, வேலூர் நீதிபதியின் விளக்க மனுவின் நகலை, பொன்முடி தரப்புக்கு வழங்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கை விழுப்புரத்தில் இருந்து வேலுார் நீதிமன்றத்துக்கு மாற்றிய, உயர் நீதிமன்றம் நிர்வாக ரீதியான உத்தரவை வழங்க வேண்டும்; வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என, பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரை எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டார். மேலும், உயர் நீதிமன்றத்தின் நிர்வாக ரீதியிலான உத்தரவை கோரும் மனுவுக்கு, தலைமை பதிவாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும், 12-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.