'மிக்ஜாம்’ புயல் எதிரொலி..!! அனைத்து விதமான கட்டுமானப் பணிகளையும் உடனே நிறுத்த உத்தரவு..!!
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டுமென மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, தற்போது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கே 510 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நெல்லூரிலிருந்து தென் கிழக்கு திசையில் 630 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திலிருந்து தென் கிழக்கு திசையில் 710 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், '’வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலால், பலத்த காற்று வீசும் என்பதால் சென்னையில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும் பணி உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும். கட்டுமான பணிகளை நிறுத்துவதுடன் அதற்கான பொருட்களை தரைத்தளத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்’’ என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.