மோதி பார்த்துடுவோமா?. ஜேக் பாலை கன்னத்தில் அறைந்த மைக் டைசன்!. 58 வயதில் மீண்டும் பாக்ஸிங்!. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!.
Boxing: முன்னாள் உலக ஹெவி வெயிட் சாம்பியனான மைக் டைசன், யூடியூப்பர் ஜேக்பால் இருவருக்கும் இடையேயான குத்துசண்டை போட்டி அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த குத்துச்சண்டை ஜாம்பவான், மைக் டைசன். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு பின் குத்துச்சண்டையில் பங்கேற்கவுள்ளார். தற்போது 58 வயதாகும் இவர், தம்மைவிட ஏறக்குறைய பாதி வயது உள்ள ஜேக் பாலை எதிர்கொள்கிறார். இதற்காக தனது உடம்பை முறுக்கேற்றியுள்ளார் டைசன். 2005-ல் கடைசியாக கெவின் மைக்ப்ரைட் உடன் மோதிய போட்டியில் தோல்வியடைந்த டைசன், அப்போட்டியுடன் குத்துச்சண்டைக்கு விடைகொடுத்தார்.
இப்போது விட்டதை பிடிக்கும் வெற்றி வெறியுடன், களமிறங்குகிறார் டைசன். ஜூலை மாதமே நடந்திருக்க வேண்டிய இந்தப் போட்டி, மைக் டைசனின் உடல்நலக்குறைவு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இவருடன் மோதும் 27 வயதாகும் ஜேக் பால், யூ டியூபராக இருந்து பின்னர் குத்துச்சண்டை வீரராக மாறியவர். இவர்கள் இருவரும் மோதும் இந்தப் போட்டியானது, 8 சுற்றுகளை கொண்டதாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சுற்றும் 2 நிமிடங்களை கொண்டதாக இருக்குமென தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், போட்டி துவங்குவதற்கு முந்தைய நாளான நேற்று (வியாழக்கிழமை) இரவு இருவரின் எடையும் சோதனை செய்யப்பட்டது. அப்போது டைசன் 228.4 பவுண்டுகளும், பால் 227.2 பவுண்டு எடையையும் கொண்டிருந்தனர். அப்பொழுது நடந்த சிறிய உரையாடலின்போது, மைக் டைசன் திடீரென ஜேக் பாலின் கன்னத்தில் அறைந்தார். உடனடியாக, பாதுகாப்பாளர்கள் இருவரையும் பிரித்தனர்.
ஜேக் பால் பேசியவிதம் மைக் டைசனை கோபப்படுத்தியதாக ஒரு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இருவரும் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் சந்தித்த போது, டைசனின் காலை ஜேக் பால் மிதித்துவிட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த டைசன் ஜேக் பாலை அடிக்கத்துணிந்ததாக வீடியோ ஆதாரத்துடன் சிலர் பகிர்ந்து வருகின்றனர். மேலும், டைசன் அடிக்க முயன்ற அடி, ஜேக் பால் மீது பட்டிருந்தால், அதற்கே ஜேக் பால் ஒரு வாரகாலம் ஓய்வு எடுக்கவேண்டி இருந்திருக்கும் என பலர் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
அப்போது பதிலளித்த மைக் டைசன், 'உரையாடல் நிறைவடைந்தது' என்று தெரிவித்து மேடையிலிருந்து வெளியேறினார். இதற்கு பதிலளித்த ஜேக் பால், 'அவர் அறைந்ததால் நான் எந்த வலியையும் உணரவில்லை.. அவர் கோபமாக இருக்கிறார். அவர் ஒரு கோபமான குட்டி தெய்வம்… அழகான அறை நண்பா.. நிச்சயம் இதற்கு ரிங்கில் பதிலடி கொடுப்பேன். அது தனது கன்னத்தை கிள்ளியது போன்ற உணர்வை தந்தது. இந்தப் போட்டியில் டைசனை நாக்-அவுட் செய்வேன்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உலக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எர்லிங்டன் நகரில் ஏடி அண்ட் டி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு, டைசன் – ஜேக் பால் ஆக்ரோசமாக மோதவுள்ளனர். இப்போட்டியில், தன் சகோதரர் லோகன் பால் சமீபத்தில் விட்ட சவால்படி, மைக் டைசனை முதல் ரவுண்டிலேயே ஜேக் பால் நாக்அவுட் முறையில் வீழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது