இன்று கரையை கடக்கும் மிக்ஜாம் புயல்!… திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்!
மிக்ஜாம் புயல் இன்று தீவிர புயலாக கரையை கடக்கவுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ‘மிக்ஜாம் புயல்’ வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா- வடதமிழக கடலோரப்பகுதிகளில் வலுப்பெற்று ‘தீவிர புயலாக’ சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு (ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு வடகிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து இன்று(செவ்வாய்கிழமை) முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையில் நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே பாபட்லாவிற்கு அருகே தீவிர புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் நேற்று முன்தினம் காலை முதலே மழை பெய்து வருகிறது. மாலை 6 மணிக்கு மேல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விடாமல் மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக இரவு 9 மணிக்கு மேல் பலத்த காற்று மற்றும் பேய் இரைச்சலுடன் மழை கொட்டி தீர்க்க தொடங்கியது. பலத்த காற்றால் சில வீடுகளில் ஜன்னல்களின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தது. இதனால் சென்னைவாசிகள் இரவில் தூங்காமல் விழித்திருக்க வேண்டிய அவல நிலை உருவானது. இருப்பினும், கொட்டித்தீர்த்த பேய் மழையால் சென்னையின் சாலைகள் அனைத்தும் மழை நீர் தேங்கியுள்ளன.