கிடுகிடுவென உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்..!! மூழ்கியது நந்தி சிலை..!!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76 அடியாக உயர்ந்து ஜலகண்டேஸ்வரர் ஆலய நந்தி சிலை மூழ்கியுள்ளது. அணையில் காவிரி நீர் கடல் போல் காட்சி அளிப்பதால் விவசாயிகளும், மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக காவிரி மற்றும் அதன் துணை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காவிரியின் முக்கிய துணை நதியான கபினி அணை நிரம்பியது. இதையடுத்து, கபினி அணையில் இருந்து உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு மேட்டூர் அணைக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. அதே போல் காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் கட்டப்பட்டுள்ள கே.ஆர்.எஸ் அணையும் நிரம்பும் நிலையில் உள்ளது. எனவே, அணையின் கரை உடைந்து பெருத்த சேதம் ஏற்படக் கூடாது என்பதற்காக கே.ஆர்.எஸ். அணையில் இருந்தும் உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரி நீர் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாகவே வருகிறது. அணைக்கு வினாடிக்கு 53,830 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்றைய நிலவரப்படி 64 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அதிக நீர்வரத்து காரணமாக நேற்று 69.80 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்றைய தினம் 76 அடியாக உயர்ந்துள்ளது.
இதனால் புராதன சின்னங்கள் தற்போது தண்ணீரில் மூழ்கியுள்ளது. மேலும் சிற்றோடையாகவும் விளைநிலமாகவும் காட்சியளித்த பண்ணவாடி நீர்த்தேக்கப்பகுதி தற்போது கடல் போல் காட்சியளிக்கிறது. அணையின் நீர் மட்டம் 40 அடிக்கு கீழ் குறையும் போது பொதுமக்கள் நந்தி சிலை அருகே சென்று வழிபடுவர். அங்குள்ள கட்டடக் கலையையும் ரசிப்பர். அந்த வகையில், கடந்த ஓராண்டாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் படிப்படியாக சரிந்து 40 அடிக்கும் கீழ் சென்றதால் நந்தி சிலைக்கு அப்பகுதி இளைஞர்கள் பெயின்ட் அடித்தனர். இந்நிலையில் தற்போது அணையின் நீர் மட்டம் 76 அடியை கடந்து விட்டதால் புராதன சின்னங்கள் மூழ்கி உள்ளன.
Read More : பட்டா மாறுதல்..!! இனி எல்லாமே ஈசி தான்..!! கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க மக்களே..!!