உடல் எடையை குறைக்க உதவும் முருங்கைக்கீரை! முருங்கைக்கீரையில் குவிந்துக்கிடக்கும் நன்மைகள்!
முருங்கைக் கீரை நம் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்களை வழங்குவதோடு இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உள்ளடக்கி இருக்கிறது. இந்த முருங்கைக் கீரையை சாறாக குடிப்பதன் மூலமும் சமைத்து உண்பதன் மூலமும் உடலுக்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. அதோடு பல்வேறு நோய்களையும் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இது உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வைக்கிறது.
முருங்கைக் கீரையில் கால்சியம் பொட்டாசியம் இரும்புச்சத்து, துத்தநாகம், மக்னீசியம் மற்றும் தாமிரம் போன்ற மினரல் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. மேலும் இதில் வைட்டமின்களான பீட்டா கரோட்டின் ஏ,பி, சி,டி மற்றும் , போலிக் ஆசிட் ஆகிய சத்துக்களும் நிறைந்துள்ளது. மேலும் இதில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. மேலும் முருங்கை கீரை சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.
வெறும் வயிற்றில் முருங்கை கீரை அவித்த தண்ணீரை குடித்து வருவதன் மூலம் நம் உடல் எடை கட்டுப்படுத்தப்படுகிறது. இதில் இருக்கும் அதிகமான நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் முருங்கைக் கீரை தண்ணீரை குடிப்பதால் பசி ஏற்படுவதும் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக உடல் எடை குறைப்பில் முருங்கைக்கீரை முக்கிய பங்கு வகிக்கிறது.
முருங்கைக் கீரையில் இருக்கக்கூடிய மூலக்கூறுகள் உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது. இவை நம் உடலில் சுரக்கும் இன்சுலின் அளவை சீராக்குகிறது. மேலும் நாம் உண்ட உணவில் இருந்து கிடைக்கும் சர்க்கரை ரத்தத்தில் உடனடியாக கலப்பதையும் தடுக்கிறது. மேலும் இனிப்பு அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் முருங்கைக்கீரை குறைக்கிறது.
நாம் சாப்பிடும் உணவை சக்தியாக மாற்றுவது தான் மெட்டபாலிசம். நமது மெட்டபாலிசத்தின் அளவை பொருத்து நம் உடல் கலோரிகளை எரிக்கும். ஒருவர் உடலில் அதிக மெட்டபாலிசம் இருக்கும் போது அவர் உண்ணும் உணவுகள் எளிதில் ஜீரணம் ஆகி உடல் எடை கட்டுக்குள் இருக்கும். நம் உடலின் இந்த மெட்டபாலிசத்தை தூண்டுவதில் முருங்கைக்கீரை முக்கிய பங்கு வைக்கிறது. இதன் காரணமாக தொடர்ந்து முருங்கைக்கீரை சாப்பிட்டு வர நமது மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை கட்டுப்படுத்தப்படுகிறது.