தாய்மொழி கல்வி | "3 ஆண்டுகளில் அனைவருக்கும் இந்திய மொழிகளில் கல்வி.." டிஜிட்டலில் வழங்க மத்திய அரசு உத்தரவு.!
அனைத்து படிப்பிற்கான பாட புத்தகங்களையும் இந்திய மொழிகளில் டிஜிட்டல் முறையில் வழங்குமாறு பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இவற்றை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் செய்து முடிக்கவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் தங்கள் தாய்மொழியில் படிப்பதற்கு வாய்ப்பாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் இருக்கும் அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் உயர்கல்வி நிறுவனங்கள் யுஜிசி, ஏஐசிடிஇ,என்சிஆர்டி
ஐஜிஎன்ஓயூ மற்றும் ஐஐடி ஆகியவை தங்களது அனைத்து பாடத்திட்டங்களையும் இந்திய மொழிகளில் மாணவர்களுக்கு வழங்குமாறு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. மேலும் இதனை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் செய்து முடிக்குமாறும் மத்திய அரசு கட்டளையிட்டுள்ளது.
பல்கலைக்கழகம் மானியக் குழு ஏஐசிடிஇ மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகியவையும் இதற்குரிய நடவடிக்கை எடுத்து தாய் மொழியில் அனைத்து கல்விகளையும் பயிலும் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மேலும் மாநிலங்களில் உள்ள பள்ளி கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும் அனைத்து பாடத்திட்டங்களையும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்திய மொழிகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்து இருக்கிறது.
மத்திய அரசால் 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பதாகவும் மத்திய கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் தாய் மொழியில் கல்வியை பயில்வதன் மூலம் அவர்களால் சிறந்த முறையில் கல்வி கற்க முடியும் என்றும் தெரிவித்திருக்கிறது. மேலும் தாய் மொழியில் கல்வி கற்பது சிந்தனையாற்றலை தூண்டும் எனவும் தெரிவித்திருக்கிறது.
இந்தியா பல்வேறு மொழி பேசும் மக்களை கொண்ட ஒரு நாடு. இந்தியாவில் இருக்கும் மொழிகள் இந்த தேசத்தின் மிகப்பெரிய சொத்து. இவை கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக தேசிய கல்விக் கொள்கை தெரிவிக்கிறது. நம் நாட்டில் இருக்கும் பல்வேறு மொழிகளை நாம் சரியாக பயன்படுத்துவதன் மூலம் பொருளாதாரம் கல்வி மற்றும் கலாச்சார மேம்பாட்டில் மிகப்பெரிய முன்னேற்றம் காணலாம் எனவும் தேசிய கல்விக் கொள்கை தெரிவிக்கிறது.
கல்வித் திட்டங்கள் மற்றும் பாடத்திட்டங்களை இந்திய மொழிகளில் தயாரிப்பதன் மூலம் இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழிகளும் வளர்ச்சி அடையும். மேலும் மாணவர்களின் கல்வித் திறனும் மேம்படும். இது 2047-இல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் எனவும் தேசிய கல்விக் கொள்கை தெரிவிக்கிறது. மத்திய அரசு, மருத்துவம் பொறியியல் சட்டப் படிப்புகள் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகள் போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் ஆகியவற்றை இந்திய மொழிகளில் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. இந்தத் திட்டம் 'அனுவதிணி' என்ற ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் செயலி மூலம் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறது.
மேலும் இந்த பாடத்திட்டங்கள் 'ஏகும்ப்' போர்டல் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய தயாராக இருப்பதாகவும் மத்திய கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. மேலும் பள்ளிக்கல்வி சுற்றுச்சூழல் குறித்த ஆய்வு புத்தகங்கள் மற்றும் பாடத்திட்டங்கள் 30க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 'தீக்ஷா' என்ற இணையதள போர்டலில் இருப்பதாகவும் மத்திய கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. இவை தவிர JEE, NEET மற்றும் CUET போன்ற தேர்வுகளுக்கான பாட புத்தகங்களும் 13 இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் மத்திய கல்வித்துறை தெரிவித்துள்ளது .