அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல் - உஷார் நிலையில் தமிழ்நாடு..!
பறவைக் காய்ச்சல் தமிழ்நாட்டில் பரவுவதை தடுக்க தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதிகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதானா கிராமங்களில் இயங்கி வரும் சில கோழிப் பண்ணைகளில் அதிக அளவிலான வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அவற்றை ஆய்வு செய்த போது H5N1 என்ற பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் பறவைக் காய்ச்சல் பரவக்கூடும் என்பதால், தமிழ்நாடு - கேரள எல்லையோர மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டு, சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில், கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கோவை மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லைப் பகுதிகளான ஆனைகட்டி, வாளையார், வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்பகவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு உள்பட 12 சோதனைச் சாவடிகளில், சிறப்பு கால்நடைப் பராமரிப்புக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த H5N1 எனப்படும் பறவைக் காய்ச்சல் பறவைகளிடம் இருந்து மனிதா்களுக்கும் பரவக்கூடியது. குறிப்பாக, அதன் கழிவுகளில் இருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவக்கூடும். இதன் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, தசைப் பிடிப்பு, இருமல், மூச்சு திணறல் போன்றவை உள்ளன.