மருத்துவ அறிவியல் மேதை Alexander Fleming நினைவு தினம் இன்று!… உலகின் முதல் ஆன்டி பயாடிக் மருந்தை கண்டறிந்தவர்!
Alexander Fleming: உலகின் முதல் ஆன்டிபயாடிக் மருந்தான பென்சிலின் மருந்தை கண்டறிந்த மருத்துவ அறிவியல் மேதை, நோபல் பரிசு பெற்ற அலெக்சாண்டர் பிளெமிங் நினைவு தினம் இன்று. இவரது கண்டுபிடிப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டி பயாடிக் மருந்துகள் இந்த உலகில் இல்லை. இந்த உலகில் கண்டறியப்பட்ட முதல் ஆண்டிபயாடிக் மருந்து பென்சிலின்தான். இதை கண்டறிந்தவர் அலெக்சாண்டர் பிளெமிங். உலகப்புகழ் பெற்ற மருத்துவ அறிவியல் மேதை பிளெமிங் மானிட இனத்தின் நல்வாழ்வில் பெரிதும் ஆர்வம் காட்டினார். அவரது கண்டுபிடிப்பான பென்சிலின், இன்றும் நிமோனியா, தொண்டை அடைப்பான் போன்ற நுண்ணுயிரிகளால் விளையும் நோய்களுக்குத் தடுப்பு மருந்தாக விளங்குகிறது. மேலும் டெராமைசின், ஸ்ட்ரெப்டோமைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் (anti-biotic) கண்டுபிடிப்புக்கும் வழிகோலியது.
அலெக்சாண்டர் பிளெமிங் ஸ்காட்லாந்தின் தென்பகுதியில் 1881ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி பிறந்தார். மிக இளம் வயதிலேயே தந்தையை இழந்த பிளெமிங் தூய மேரி மருத்துவ பள்ளியில் படித்தார் . அப்போதே மருத்துவ படிப்பின் பல்வேறு பிரிவுகளிலும் தன் அறிவுக்கூர்மையை வெளிப்படுத்தி பல பரிசுகளை வென்றார். படிப்பை போலவே நீச்சலிலும் , போலோ விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
அறிவியலில் ஈடுபாடு கொண்டிருந்தார். ஆனாலும் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, கப்பல் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். நாடகம், விளையாட்டு, ஓவியக் கலை ஆகியவற்றில் திறனும் ஆர்வமும் கொண்டிருந்தார். 20 வயதில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது நோய்த் தடுப்பு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவந்த பேராசிரியர் ஆம்ரைட் டே போலவே தானும் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என ஆசைப்பட்டார். ஆராய்ச்சியில் ஈடுபட்டால் மருத்துவத் தொழில் செய்து பணம் சம்பாதிக்க முடியாது என் நம்பிக்கை இருந்தது.
ஆனால், அலெக்சாண்டரின் மனம் ஆராய்ச்சியையே நாடியது. அண்ணனிடம் தன் விருப்பத்தை வெளியிட்டார். குடும்பத்துக்கு வருமானம் கிடைக்காது என்றாலும் ஆராய்ச்சி வெற்றி பெற்றால் அது மனித குலத்துக்கு பயன்படும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் ஆராய்ச்சிக்கு அனுமதி அளித்தார் அண்ணன். மருத்துவப் பட்டம் பெற்ற பின்னர் அல்ம்ரோத் ரைட் (Almroth Wright) என்ற நுண்ணுயிரியல் ஆசிரியரிடம் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார்.
பேராசிரியர் ரைட் அவர்களின் வழிகாட்டுதலில் டைபாய்டுக்கு தடுப்பூசி போடும் முறையை பிளெமிங் உருவாக்கி இருந்தார். அதற்கு சிறிது நாட்களுக்கு முன்தான் லூயி பாஸ்டர் கால்நடைக்கான தடுப்பூசி போடும் முறையை கண்டறிந்திருந்தார். அதேபோல் நோய் தடுப்பாற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு தடுப்பூசி செலுத்துவதற்கு ரைட் முயற்சி செய்து கொண்டிருந்த நாட்கள் அவை. அதற்கு தனது மாணவர் பிளெமிங் குறுதியின் வெள்ளை அணுக்களை வைத்தே ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
அன்றைய நாட்களில் எதேர்ச்சையாக பிளெமிங் தம் ஆய்வுக்கூடத்தில், வைக்கப்பட்டிருந்த தட்டில், தொற்றும் புண்ணின் சீழ்நீரில் உள்ள, தீங்கிழைக்கக்கூடிய நுண்ணுயிரிகளில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது அப்புண்ணின் மீது பூஞ்சணம் பூத்திருப்பதைக் கண்டார். அதை மூடாமல் வைத்திருந்ததால் இப்பூஞ்சணம் உண்டாகியிருப்பதாக எண்ணினார். பின்னர் நுண்ணுயிரிகள் அழிக்கப்பட்டதால்தான் பூஞ்சணம் பூத்துள்ளது என்பதை அறிந்தார். இதனால் இந்த ஆய்வில் அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. இப்பூஞ்சணம் நீல நிறமாக இருப்பதும், நுண்ணுயிரிகளை அழிக்கும் ஆற்றல் பெற்றிருப்பதும் கண்டறியப்பட்டது.
இறுதியாக இப்பூஞ்சணம்தான் பென்சிலின் என அறிந்து கொண்டார். உடலில் செலுத்தினால் நோயைக் குணப்படுத்தவும், நோய் வராமல் தடுக்கவும் கூடும் எனக் கண்டறிந்தார். ஆனால் பென்சிலினை இன்னொரு மருந்துடன் கலந்தால் அது தனது ஆற்றலை இழந்து நுண்ணுயிரிகளை அழிக்க இயலவில்லை என்ற உண்மையும் வெளிப்பட்டது. இந்நிலையில் பிளெமிங் தமது பென்சிலின் ஆய்வை நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் 1938 ஆம் ஆண்டு வாக்கில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அறிவியல் அறிஞர்கள் இருவர் இதே துறையில் தங்களின் ஆய்வை மேற்கொண்டனர். இவர்கள் உறைநிலையில் பென்சிலின் தனது ஆற்றலை இழப்பதில்லை எனக் கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து இரண்டாம் உலகப்போரின்போது காயம் அடைந்த படைவீரர்களுக்கு உயிர்காக்கும் அரணாக பென்சிலின் விளங்கியது என்றால் மிகையல்ல.
பின்னர்1945-ம் ஆண்டில் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங், ஹோவர்ட், ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகிய மூவருக்கும் மருத்துவம் அல்லது உடல் இயங்கியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது, 1944-ல் சர் பட்டம் வழங்கப்பட்டது. மனித குல வரலாற்றில் கோடி உயிர்களைக் காக்க உதவிய பென்சிலின் மருந்தை கண்டறிந்த பிளெமிங் 1955 மார்ச் 11 ஆம் நாள் காலமானார்.