பளுதூக்குதலில் 1 கிலோ வித்தியாசத்தில் பதக்கத்தை இழந்த மீரா பாய் சானு!. கண் கலங்கியபடி ரசிகர்களுக்கு நன்றி!
Meera Bhai Sanu: பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பளு தூக்குதல் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மீரா பாய் சானு வெறும் ஒரு கிலோ வித்தியாசத்தில் வெண்கல பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
2017 ஆம் ஆண்டு உலக சாம்பியன் பட்டத்தை பளுதூக்குதலில் வென்ற மீராபாய் சானு மீது பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. காமன்வெல்த் தங்கம் வென்ற மீராபாய்சானு, கடந்த டோக்யோ ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதனால் இம்முறையும் மீராபாய் சானு பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ஸ்னேட்ச் பிரிவில் மீராபாய் சானு அதிகபட்சமாக 88 கிலோ எடையை வெற்றிகரமாக தூக்கினார். இந்த பிரிவு முடிவில் மீராபாய் சானு இரண்டாவது இடத்தில் இருந்தார். இதனால் மீராபாய் சானுக்கு பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிளீன் அண்ட் ஜெர்க் என்ற பிரிவில் மீராபாய் அதிகபட்சமாக 111 கிலோ எடையை தூக்கினார்.
இதனை அடுத்து 113 கிலோ எடையை கடைசி முயற்சியில் தூக்க மீராபாய் முயற்சி செய்தார். ஆனால் அவரால் அது முடியவில்லை. அதை மட்டும் மீராபாய் வெற்றிகரமாக செய்திருந்தால், நிச்சயம் வெண்கல பதக்கம் கிடைத்திருக்கும். ஒரு கிலோ வித்தியாசத்தில் வெண்கல பதக்கத்தை மீராபாய் சானு தவற விட்டதால் கண் கலங்கியபடி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு மேடையில் இருந்து இறங்கி சென்றார். இந்த தொடரில் இந்தியா இதுவரை மூன்று வெண்கல பதக்கம் மட்டுமே வாங்கி இருக்கிறது. ஆனால் பல விளையாட்டு பிரிவுகளில் நான்காவது இடத்தை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்திருக்கிறது.
Readmore: டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்து பயிற்சி வகுப்பு…! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!