புதுமைகள் தொடரட்டும்!… மாற்றங்கள் மலரட்டும்!… பிறந்தது ஆங்கில புத்தாண்டு 2024!… நாடுமுழுவதும் கோலாகல கொண்டாட்டம்!
வெறும் காலண்டர் மாறுதலாக மட்டும் அல்லாமல், நாடு, மொழி, கலாசாரம் கடந்து புதிய ஆண்டை வரவேற்பதில் மனிதர்கள் நாம் அத்தனை உற்சாகம் கொள்கிறோம். அவரவருக்கு வாழ்வியல் இலக்கு. அதையொட்டிய திட்டமிடல். இன்னல்களுக்கிடையே தொடர் ஓட்டம். இன்புறும் தருணங்களில் உற்றார் உறவினரோடு கொண்டாட்டம் என ஆண்டின் 12 மாதங்களையும் கடத்திக்கொண்டே இருக்கிறோம். கொரோனா பெருந்தொற்று, பாதுகாப்பும் நிறைந்த கடந்த காலங்களை நினைவில் ஏந்தி, சுகாதாரம், நிதி மேலாண்மையில் அக்கறைக்கொண்டு, இன்னும் அதிகமாக சக மனிதர்களிடம் அன்பு பாராட்டி புதிய ஆண்டில் நடைபோடுவோம். ஆம், நாம் இப்போது 2024-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டோம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதுபோல், இனி உலக மக்கள் நலமோடும், வளமோடும் வாழ நல்வழி பிறக்கட்டும். அன்பும், மகிழ்ச்சியும் இன்னும் இன்னும் பெருகட்டும். வாசகர்கள் அனைவருக்கும் 1NEWSNATION தமிழ் இணையதளம் சார்பாக 2024 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டு நிறைவடைந்து 2024ம் ஆண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டு கொரோனா பரவல் மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக கட்டுப்பாடுகள் பலத்தப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை, திருச்சி, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் பாதுகாப்புக்காக 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை விமான நிலையம் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் சென்னையில் புத்தாண்டை வரவேற்க தயாராக இருந்தனர். டிசம்பர் மாதம் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட கனமழை பாதிப்புகள் இருந்து பொதுமக்கள் மீண்டு வந்து இன்று நள்ளிரவு உற்சாகமாக ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை போலீசார் விதித்திருந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்திவிட்டு அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை தடுக்கும் வகையில் மெரினா காமராஜர் சாலை, அண்ணாசாலை, வடபழனி, பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதேபோல, பெண்களிடம் அத்துமீறல், சாலை விபத்து போன்ற விரும்பத்தகாத செயல்களை தவிர்க்க கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், இரவு 8 மணிக்கு பிறகு இந்த பகுதியில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. புத்தாண்டை வரவேற்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரே இடத்தில் திரண்டனர். இந்நிலையில் சரியாக 12 மணி ஆனதும் அனைவரும் ஒன்று சேர்ந்து 'ஹேப்பி நியூ இயர்' என்று உற்சாகமாக குரல் எழுப்பியபடியும், கைகளை குலுக்கியும் புத்தாண்டை வரவேற்றனர். வண்ண, வண்ண பலூன்களை பறக்கவிட்டனர். இதேபோல, விதவிதமான வகைகளில் கேக்குகளை கொண்டுவந்து அதை வெட்டி புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர், அருகில் இருந்தவர்களுக்கும் கேக்குகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாக நடனமாடி புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டை முன்னிட்டு சென்னை சாந்தோம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.