முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திங்கள் தோறும் ரூ.3,500 உதவித்தொகை பெறும் திட்டம்..! யாரெல்லாம் இதற்கு விண்ணப்பிக்கலாம்...?

Mature Tamil scholars can apply for Rs.3500 scholarship every Monday.
08:40 AM Oct 04, 2024 IST | Vignesh
Advertisement

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள் தோறும் ரூ.3500 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

Advertisement

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்தோறும் ரூ.3500/-ம். மருத்துவப்படி ரூ.500/-ம் என நான்காயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பெறுகிறது. தமிழுக்காகத் தம் வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு இந்த உதவித் தொகை அவர்கள் வாழுங்காலமெல்லாம் தமிழ்த் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது. தமிழ் காத்த தகைமைக்காக உதவித் தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னர். அவரின் மரபுரிமையருக்கு, அவர்தம் வாழ்நாள் முழுவதும் ரூ.2500/- மற்றும் மருத்துவப் படி ரூ.500/- என அத்திருத்தொண்டு தொடர்கிறது.

தமிழாய்ந்த தமிழ்மகனின் தமிழரசு தமிழ்த் தொண்டர்களைக் காக்கும் இப்பணியில் இதுகாறும் 1334 அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் பயனடைந்துள்ளனர். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் அதவை முதிர்ந்த தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து 2024-2025ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மகளிர் உரிமைத் தொகை, சமூகநல பாதுகாப்பு உதவித்தொகை போன்ற தமிழ்நாடு அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்பிக்கத் தகுதிகள்: 01.01.2024 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும். (வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று இணைக்கப்பட வேண்டும். தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு. தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்று இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் (ஸ்மார்ட் கார்டு), மரபுரிமையர் (கணவன் / மனைவி) இருப்பின் அவரது ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும்.

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்பப்படிவத்தினை மண்டில / மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை/ உதவி இயக்குநர் அலுவலகத்திலேயே நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.tamilvalarchithurai.tn.gov.in கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு முன்னர்க் கூறியது போல், திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3500/-ம் மருத்துவப்படி ரூ.500/-ம் அவருடைய வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். அக்டோபர் 31ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

Tags :
Tamil scholartn governmentதமிழ்நாடுதமிழ்நாடு அரசு
Advertisement
Next Article