இந்தியாவில் லைட்டருக்கு தடை.. தமிழக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!!
தமிழகத்தில் வேலைவாய்ப்பை வழங்கும் முக்கிய தொழிலான தீப்பெட்டி தொழில் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவு விலை பிளாஸ்டிக் லைட்டர்களால் பாதிப்பை சந்தித்து வந்தது. எனவே, பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், லைட்டர் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மேலும், இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூறுகையில், அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதிக்கான இலவசப் பட்டியலில் சிகார்லைட்டர்கள் இருந்ததால், சுலபமாக இறக்குமதி செய்து, சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர். இதனால் தீப்பெட்டித் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.20-க்கும் கீழ் விலை குறைவான சிகார் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனாலும், ரூ.20-க்கு மேல் விலை கொண்ட லைட்டர்கள் இறக்குமதிக்கான இலவசப் பட்டியலில்தான் இருந்து வந்தது.
இதனால் உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்து, லைட்டர் தயாரித்து ரூ.10-க்கும் குறைவான விலையில் சந்தையில் விற்பனைக்கு வந்ததால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். சமீபத்தில் விருதுநகர் வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்தோம். இந்நிலையில், சிகார் லைட்டர்கள் மற்றும் அதன் உதிரிப் பாகங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு முழுமையான தடை விதித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிதியமைச்சர் மற்றும் மத்திய அரசுக்கு நன்றி. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Read more ; நெருங்கும் தீபாவளி… வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை!! இன்றைய நிலவரம் இதோ..