இம்ரான் கான் கட்சியின் தேர்தல் பேரணியின் போது குண்டுவெடிப்பு..! 4 பேர் பலி, பலர் படுகாயம்..!
பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி நடக்கவுள்ளதை அடுத்து அங்கு வாக்கு சேகரிக்கும் பணியில் முக்கிய கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் PTI கட்சி இன்று பலுசிஸ்தான் மாநிலம் சிபியில் தேர்தல் பேரணி நடத்தியுள்ளது. இந்த பேரணியின் போது வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. சிபியில் உள்ள மாவட்ட தலைமையக மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாபர், உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் PTI (பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்) கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து PTI கட்சியில் அதிகாரப்பூர்வ x தளத்தில், "சபியில் தேர்தல் பேரணியில் நடந்த குண்டுவெடிப்பை PTI கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. உயிரிழந்தவர்கள் குறித்து மிகுந்த வருத்தத்தையும் தெரிவிக்கிறது. PTI கட்சியின் அமைதியான தேர்தல் பேரணி மீதான தாக்குதலை, மேற்பார்வையிடும் மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்களின் குற்றவியல் தோல்வியாகும்" என்று பதிவிட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து, இடைக்கால பலுசிஸ்தான் தகவல் அமைச்சர் ஜான் அச்சக்சாய், குண்டுவெடிப்பைப் பொருட்படுத்தாமல், திட்டமிட்டபடி தேர்தல்கள் நடத்தப்படும் என்றும், பயங்கரவாதச் செயல் எந்தவொரு உறுதியான நடவடிக்கையையும் எடுப்பதில் இருந்து அரசாங்கத்தை ஊக்கப்படுத்தாது என்று கூறினார்.