பேட்டிங், பவுலிங்கில் மாஸ் அட்டாக்!. தென்னாப்பிரிக்காவை அலற விட்ட இந்தியா!. ஆரம்பமே அபார வெற்றி!.
IND VS SA T20: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 'டி-20' போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால், 61 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றுள்ளது. அதன்படி, முதல் போட்டி நேற்று டர்பன், கிங்ஸ்மீட் மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் அதிரடி துவக்கம் தந்தார். யார் பந்துவீசினாலும் அடித்து நொறுக்கினார். மஹாராஜ் ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். கோயட்சீ பந்தில் மார்க்ரமின் கலக்கல் 'கேட்ச்சில்' அபிஷேக் சர்மா (7) அவுட்டானார். 'பவர் பிளே' (முதல் 6 ஓவர்) முடிவில், இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 56 ரன் எடுத்தது. தனது விளாசலை தொடர்ந்த சாம்சன், 27 பந்தில் அரைசதம் எட்டினார். குருகர் பந்தில் கேப்டன் சூர்யகுமார் (21) வீழ்ந்தார். சுழற்பந்துவீச்சை அருமையாக சமாளித்த சாம்சன், 47 பந்தில் சதம் விளாசினார். 50-100 ரன்னை எட்ட இவருக்கு 20 பந்து தான் தேவைப்பட்டது.
இதையடுத்து திலக் வர்மா (33), ஹர்திக் பாண்ட்யா (2), ரிங்கு சிங் (11) ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்படி, இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 202 ரன் குவித்தது. கடின இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணி, இந்திய பந்துவீச்சில் அதிர்ந்தது. கேப்டன் மார்க்ரம் (8), ஸ்டப்ஸ்(11), ரிக்கிள்டன் (21) விரைவில் வெளியேற 6 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 49 ரன் எடுத்து தவித்தது. தொடர்ந்து, கிளாசன் (25), டேவிட் மில்லர் (18) நடையை கட்டினர். தென் ஆப்ரிக்க அணி 17.5 ஓவரில் 141 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இந்தியா சார்பில் 'சுழலில்' மிரட்டிய வருண் சக்ரவர்த்தி, பிஷ்னோய் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
Readmore: இதை மட்டும் பண்ணுங்க!. இல்லைன்னா கேஸ் சிலிண்டர் கிடைக்காது?. நாடு முழுவதும் மத்திய அரசு மெசேஜ்!.