14 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த "மார்ட்டின் கப்டில்"…! ஒய்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரும் அதிரடி நாயகனுமான மார்ட்டின் கப்டில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 38 வயதான மார்ட்டின் கப்டில் ஒய்வு குறித்த அறிவிப்பின் மூலம் 14 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மார்ட்டின் கப்டில்.
மார்ட்டின் கப்டில் கடைசியாக 2022 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்காக விளையாடினார். இவர் 198 சர்வேதச ஒருநாள் போட்டிகளிலும், 122 டி20 போட்டிகளிலும், 47 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். மார்ட்டின் கப்டில் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 23 சதங்களை அடித்துள்ளார். குறிப்பாக 2015 உலகக் கோப்பையின் போது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக மார்ட்டின் கப்டில் ஆட்டமிழக்காமல் 237 ரன்கள் எடுத்தார். 2009 ஆம் ஆண்டு இரட்டைச் சதம் அடித்த நியூசிலாந்தின் முதல் ஆடவர் என்ற பெருமையைப் பெற்றார். இதன் மூலம் நியூசிலாந்து அணியின் ODI வடிவத்தில் ஒரே இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்று தந்தது.
2009 ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான மார்ட்டின் கப்டில் 7,346 ODI ரன்களை குவித்தார், இந்த ரன்கள் மூலம் அந்த அணியின் அதிக ODI ரன்-ஸ்கோர்கள் பட்டியலில் ராஸ் டெய்லர் மற்றும் ஸ்டீபன் ஃப்ளெமிங்கிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இவர் உள்ளார். மேலும் இவர் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 1,385 பவுண்டரிகள் மற்றும் 383 சிக்ஸர்களை அடித்துள்ளார். மார்ட்டின் கப்டில் ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடி வருகிறார், மேலும் தற்போது சூப்பர் ஸ்மாஷின் தற்போதைய பதிப்பில் ஆக்லாந்து ஏசஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த அறிவிப்பில் மார்ட்டின் கப்டில் தெரிவித்திருப்பதாவது,"ஒரு சிறு குழந்தையாக நியூசிலாந்திற்காக விளையாட வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது, மேலும் எனது நாட்டிற்காக 367 ஆட்டங்களில் விளையாடியதை நம்பமுடியாத அதிர்ஷ்டமாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். ஒரு சிறந்த தோழர்களுடன் சேர்ந்து silver fern-ஐ அணிந்த நினைவுகளை நான் என்றென்றும் ரசிப்பேன். பல ஆண்டுகளாக எனது அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ஊழியர்கள் அனைவருக்கும், நன்றி சொல்ல விரும்புகிறேன். குறிப்பாக பயிற்சியாளர் Mark O'Donnell 19 வயதுக்குட்பட்ட நிலையிலிருந்து எனக்குப் பயிற்சி அளித்து, எனது வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்தவர்.
எனது மேலாளர் லீன் மெக்கோல்ட்ரிக் அவர்களுக்கும் ஒரு சிறப்பு நன்றி சொல்ல வேண்டும், உங்கள் ஆதரவை நான் எப்போதும் பாராட்டுவேன். என் மனைவி லாரா மற்றும் எங்கள் அழகான குழந்தைகள் ஹார்லி மற்றும் டெடி-க்கு நன்றி. லாரா எனக்காகவும் குடும்பத்திற்காகவும் நீங்கள் செய்த தியாகங்களுக்கு நன்றி. விளையாட்டின் ஏற்ற தாழ்வுகள் அனைத்திலும் நீங்கள் எனது மிகப்பெரிய ஆதரவாளராகவும், ஆலோசனையாகவும் இருந்தீர்கள். நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இறுதியாக, நியூசிலாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று மார்ட்டின் கப்டில் தெரிவித்துள்ளார்.