பெண்களின் திருமண வயது 9 ஆக குறைப்பு...! ஈராக் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்...!
ஈராக் நாடாளுமன்றம் பெண்களுக்கான திருமண வயதை 9 ஆக குறைப்பதற்கான மசோதாவை கொண்டு வந்துள்ளது.
பெண் குழந்தைகளின் திருமண வயதை 9 ஆகவும், ஆண் குழந்தைகளின் திருமண வயதை 15 ஆகவும் குறைக்கும் சர்ச்சைக்குரிய மசோதா ஈராக் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மனித உரிமை அமைப்புகள் மற்றும் பெண்கள் அமைப்புகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, ஈராக்கில் திருமணம் செய்ய குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இருப்பினும், ஈராக் சட்ட அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட புதிய சட்ட விதி படி, குடும்ப விஷயங்களுக்கு மத விதிகளை பின்பற்றலாமா அல்லது சிவில் நீதிமன்ற முறையை பின்பற்றலாமா என்பதை மக்கள் தேர்வு செய்ய அனுமதிக்கும்.
இந்த மாற்றம், வாரிசுரிமை, விவாகரத்து, குழந்தைக் காவல் போன்ற பகுதிகளில் பெண்களின் உரிமைகளைக் குறைக்கும் என்று அஞ்சப்படுகிறது. சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஒன்பது வயதுடைய பெண் குழந்தைகளும், 15 வயதுடைய ஆண் குழந்தைகளும் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படும். இதனால் குழந்தைத் திருமணங்களும், இளம்பெண்கள் சுரண்டலும் அதிகமாக நடக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.