’சாதி மறுப்பு திருமணம்’..!! ’எங்கள் அலுவலகம் எப்போதும் திறந்தே இருக்கும்’..!! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு..!!
'சாதி மறுப்பு திருமணங்களுக்கு எங்கள் அலுவலகம் எப்போதும் திறந்தே இருக்கும்' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நெல்லை மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம் அறிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 28 வயது பெண், வேறு சமூகத்தை சார்ந்த இளைஞரை காதலிப்பதாக கூறி இருவரும் கட்சி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து, இந்த காதல் ஜோடிக்கு ஜூன் 13ஆம் தேதியன்று கட்சி அலுவலக வளாகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் திருமணம் செய்து வைத்தனர்.
இதனை அறிந்த பெண்ணின் தந்தை மற்றும் 10-க்கும் மேற்பட்ட பெண்ணின் உறவினர்கள் பெண்ணை அழைத்துச் செல்ல கட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது, திருமணமான பெண் அவர்களுடன் செல்ல மறுத்ததால் கட்சி நிர்வாகிகளுடன் பெண் வீட்டார் வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், பெண் வீட்டாருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, கட்சியின் அலுவலகம், கண்ணாடி, இருக்கைகள், கதவு என அங்குள்ள பொருட்கள் அனைத்தையும் பெண்ணின் வீட்டார் அடித்து நொறுக்கினர். இதனைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்த பெருமாள்புரம் போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது 9 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து 13 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.
இந்நிலையில், சாதி மறுப்பு மற்றும் கலப்பு திருமணம் செய்ய விரும்பு காதலர்களுக்கு சாட்சி கையெழுத்திட திருநெல்வேலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை எப்பொழுதும் அணுகலாம் என அக்கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.