'கண்ணீரின் கருக்கொண்ட காவியம்' அவ்வளவு யதார்த்தம்..!! மாரி செல்வராஜ் கேரியரை புரட்டி போட்ட வாழை..!! - குவியும் பாராட்டு..
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘வாழை’ திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் பொன்வேல், நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இயக்குநர்கள், நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் 'வாழை’ படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜை வாழ்த்தி வருகின்றனர். இப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்து ரசித்த இயக்குநர் பாலா, மாரி செல்வராஜை கட்டியணைத்து முத்தமிட்டார். இதேபோல் வாழை படத்தை பார்த்து நெகிழ்ந்த நடிகர் சூரி, இயக்குநர் மாரி செல்வராஜை ஆரத்தழுவி கன்னத்தில் முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினார்.
நடிகர் விஜய் சேதுபதி ; இந்த நிலையில், வாழை படத்தை பார்த்த விஜய்சேதுபதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அற்புதமான படம், இன்னும் அந்த படத்திற்குள்ளேயே இருக்கிறேன். அந்த படத்தில் அவர் பேசிய அரசியல், வசனம், நடித்தவர்கள், அந்த ஊரில் இருக்கும் ஒருவனாக நான் அதில் மாட்டிக்கொண்டு இருக்கிறேன். இதுபோன்ற படம் எடுத்த மாரி செல்வராஜ்க்கு நன்றி.
இதுபோன்ற செய்திகளை கேட்கும் போதும், செய்தி தாள்களில் பார்க்கும் போதும் சாதாரணமாக கடந்து போய் இருப்போம். இதற்கு பின்னாடி இருக்கும் வாழ்க்கையை இவ்வளவு அழுத்தம் திருத்தமாக புதிய வைத்ததற்கு நன்றி. படத்தை தியேட்டரில் வந்து பாருங்க, ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும்’ என்று விஜய் சேதுபதி அந்த வீடியோவில் உணர்ச்சி பொங்க பேசினார்.
விசிக தொல். திருமாவளவன் ; இந்த படம் குறித்து தொல். திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில், ” ‘வாழை’ கண்ணீரில் கருக்கொண்ட காவியம். கலையுலகே புருவம் உயர்த்தும் கலைநயம். உழைக்கும் மக்களுக்கு வாழைக்குலைகள் மட்டுமல்ல வாழ்க்கையே பெருஞ்சுமை. புளியங்குளத்தில் முளைவிட்ட பொதுவுடைமை அரசியலின் தாக்கத்தால் மாரியின் வேர்களில் மார்க்சியம். போதாது கூலியென போர்க்குரல் வெடித்தெழும் பொருளியல் முரண் விளக்கும் புரட்சிகரப் படைப்பு! இது மாரியின் மழலைப்பருவ வரலாறு எனினும் ஒரு சமூகத்தின் உயிர்வலி ” என்று பாராட்டியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திக்கேயன் ; நடிகர் சிவகார்த்திகேயனும் மாரி செல்வராஜையும், படக்குழுவினரையும் பாராட்டி தன்னுடைய வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார். "மாரி செல்வராஜை ரொம்ப வருடங்களுக்கு முன்பே தெரியும். அப்போதே அவருக்கு நல்ல சினிமா எடுக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்! அவரின் முதல் படமான 'பரியேறும் பெருமாள்' படத்தைப் பார்த்தபோதே என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். நமக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இப்படி ஒரு படம் எடுத்திருக்கிறார் என்றபோது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதன் பிறகு அவர் இயக்கிய 'கர்ணன்', 'மாமன்னன்' படங்கள் எல்லாம் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தன. தற்போது 'வாழை' படத்தில் அவருடைய வாழ்வில் நடந்த விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார். மிக நெருக்கமான ஒருவரின் கதையைக் கேட்பது போன்ற உணர்வை இது ஏற்படுத்துகிறது.
நடிகர் கார்த்தி ; நம் பால்ய வருடங்களை அனைவராலும் நினைவு கூற முடியும். ஆனால் அதையே ஒரு திரைக்காவியமாய் படைத்து அதில் நம்மை உள்ளிழுத்து நமக்கு மிக நெருக்கமானவராய் ஆகிவிட்டார் மாரி. சந்தோஷின் இசையையும் தேனி ஈஸ்வரின் காட்சியையும் பயன்படுத்தி வாழ்க்கையின் நிதர்சனத்தையும் வலிகளையும் அழகாய் சொல்லியிருக்கிறார். நடிப்பு என்று எதையும் சொல்லி விட முடியாது அவ்வளவு யதார்த்தம். வாழை பார்த்தபின் மாரி செல்வராஜ் மீது பெரும் அன்பு உண்டாகிறது.
இயக்குநர் ஷங்கர் ;
இயக்குநர்களில் ஒருவரனா இயக்குநர் ஷங்கர் வாழை படத்தைப் பார்த்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 'இனி எனக்கு வாழைப்பழங்களை பார்க்கும்போதெல்லாம் தலையில் வாழைத்தார்களை சுமந்து செல்லும் இந்த கதையின் மாந்தர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். வாழைப்பழம் இனி முன்னைப் போல் தித்திக்குமா என்றும் தெரியவில்லை. ஒரு யதார்த்த சினிமா, அதனுள் அழகியல், உணர்வுகள் என எல்லாமே சிறப்பாக உள்ளது. மாரி செல்வராஜுக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்..!' என ஷங்கர் தெரிவித்துள்ளார்.
Read more ; தவெக கொடிக்கம்பம் நடுவதற்கு செக் வைத்த போலீஸ்..!! – எச்சரிக்கை விடுத்த விஜய்!!