மன்மோகன் சிங் மறைவு.. அனைத்து அரசு நிகழ்ச்சி ரத்து... 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு...! மத்திய அரசு அறிவிப்பு...!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை அடுத்து 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவின் 14-வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன்சிங் கடந்த 1932 செப்.26-ல் மேற்கு பஞ்சாபில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தவர். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் கடந்த 1991-96 நரசிம்மராவ் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவி வகித்தார். பொருளாதார வல்லுநரான இவர் இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் தொடக்கத்துக்கு வித்திட்டவர். ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2004 மே மாதம் முதல் 2014 மே மாதம் வரை என தொடர்ந்து 2 முறைபிரதமராக பதவி வகித்தார்.
மன்மோகன் சிங்குக்கு ஏற்கெனவே இதயநோய் உள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. நினைவிழந்து மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது மறைவிற்கு பிரதமர் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர் அவர்களும் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவைத் தொடர்ந்து தேசிய அளவில் 7 நாட்கள் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முழு அரசு மரியாதையுடன் நாளை இறுதிச் சடங்கு நடைபெறும் எனவும் அறிவிப்பு. இன்று நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூடி மன்மோகன் சிங்கிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றவுள்ளது.