நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர் தானேவில் கைது!. மும்பை போலீசார் அதிரடி!
Saif Ali Khan: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபரை தானேவில் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி 16ஆம் தேதி அதிகாலை பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், தங்கியிருந்த 12 மாடி குடியிருப்புக்குள் மர்ம நபர் அதிகாலை 2.30 மணி அளவிற்கு வந்துள்ளான். இதனை அவரது வீட்டில் வேலை பார்ப்பவர் பார்த்து சத்தம் போடவே சைஃப் அலி கான் சத்தம் கேட்டு வந்து அந்த நபரை தடுக்க முயன்றபோது சைஃப் அலி கானையும் பணியாளரையும் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்றான். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மறுபுறம், அலிகான் கத்திக்குத்து காயத்திலிருந்து உடல் நலம் தேறியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், இந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக தப்பியோடிய நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்தநிலையில், நடிகரை குத்திவிட்டு தப்பியோடி தானேவில் தலைமறைவாக இருந்த அந்த நபரை மும்பை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு உணவகத்தில் பணிபுரியும் விஜய் தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இரவு 2.30 மணியளவில் தானேவின் ஹிரானந்தி பகுதியில் இருந்து குற்றவாளி கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளி குற்றத்தை செய்ததை ஒப்புக்கொண்டதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
மருத்துவமனை நிர்வாகத்தின்படி, சைஃப் அலி கான் நன்றாக இருப்பதாகவும், அவர் ஐசியூவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். 2.5 அங்குல நீளமுள்ள பிளேடை அகற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இருந்தது, மேலும் சைஃப் தற்போது "ஆபத்தில் இல்லை" என்றாலும், மருத்துவ ஊழியர்கள் அவரது நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.