"வாஷிங் மெஷின் 'ஆன்' செய்யக் கூப்பிட்டது குத்தமா.."? பக்கத்து வீட்டுப் பெண்ணின் கழுத்தை அறுத்த பட்டதாரி வாலிபர் கைது.!
கன்னியாகுமரி மாவட்டத்தில், வாஷிங் மெஷினை 'ஆன்' செய்ய உதவிக்கு கூப்பிட்ட பக்கத்து வீட்டு பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை அருகே பூத்துறை பகுதியைச் சேர்ந்தவர் யோகன்னான். இவர் அந்தமானில் வேலை செய்கிறார். அவரது மனைவி அபிலா (28) தனது 7 வயது குழந்தையுடன் பூத்துறையில் வசித்து வருகிறார். வாஷிங் மெஷின் ஒன்றை புதிதாக வாங்கியுள்ள அபிலா, அதனை இயக்கத் தெரியாததால் பக்கத்து வீட்டு இளைஞரான நிஷாந்த் (25) என்பவரை உதவிக்கு அழைத்துள்ளார். இவர் எம்.காம் பட்டதாரி ஆவார்.
வாஷிங் மெஷினை 'ஆன் ' செய்வதற்காக வீட்டிற்குள் நுழைந்த நிஷாந்த், அபிலாவின் கழுத்தை பிடித்து நெறிக்கத் தொடங்கினார். அபிலா கூச்சலிடவே அவரது வாயை மூடி இருக்கிறார் நிஷாந்த். அதிர்ச்சி அடைந்த அபிலா, நிஷாந்தை கீழே தள்ளிவிட்டு வீட்டை விட்டு வெளியே ஓட முயன்று இருக்கிறார். அப்போது நிஷாந்த், அபிலாவின் முடியை பிடித்து இழுத்து, தான் மறைத்து வைத்துக் கொண்டு வந்திருந்த கத்தியை பயன்படுத்தி அவரது கழுத்தை அறுத்து இருக்கிறார்.
அபிலாவின் கூச்சலைக் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினரையும் கொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளார். பின்பு அதிக கூட்டம் திரளவே, நிஷாந்த் தப்பியோட முயன்றிருக்கிறார். அவரை வளைத்து பிடித்து ஊர் பொதுமக்கள், நித்திரவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், காயம் பட்ட அபிலாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். காவல் ஆய்வாளர் இன்னோஸ் குமார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.