மனைவியின் வாயை கடித்து குதறிய கணவன்; 16 தையல் போட்டு, பேச முடியாமல் தவிக்கும் பெண்..
உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள நாக்லா பூச்சானில் விஷ்ணு என்ற நபர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் வசித்து வரும் நிலையில், நேற்று வழக்கம் போல் இவரது வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது கோவமாக வீட்டிற்க்கு வந்த விஷ்ணு, தனது மனைவியிடம் எந்த காரணமும் இல்லாமல் சண்டை போட்டுள்ளார். இதனால் எரிச்சல் அடைந்த மனைவி, சிறிது நேரம் அமைதியாக இருங்கள் என்று விஷ்ணுவிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த விஷ்ணு, நான் வாயை மூட வேண்டுமா? நீ இந்த வாய் இருந்தால் தானே என்னிடம் எதிர்த்து பேசுவாய் என்று கூறி, தனது மனைவியின் வாயை கடித்துள்ளார். இதனை தடுக்க முயன்ற அவரது மனைவியின் சகோதரியையும் கடுமையாக தாக்கியுள்ளார். விஷ்ணு கடிதத்தில், அவரது மனைவிக்கு அதிக ரத்தம் வெளியேறியுள்ளது. இதனால் அவர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு 16 தையல்கள் போடப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை குறித்து தனது மாமியார் மற்றும் மைத்துனரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் அந்தப் பெண்ணை மீண்டும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இது குறித்து அறிந்த அந்தப் பெண்ணின் தந்தை, அவரது மகளை மகூரா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் பெண்ணால், வாய்மொழியாக போலீசாரிடம் கூற முடியாததால், அவர் நடந்த முழு சம்பவத்தையும் காகிதத்தில் எழுதி கொடுத்துள்ளார். மேலும், அவர் தனது கணவர், மைத்துனர் மற்றும் மாமியார் மீது துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.