யுஜிசி நெட் தேர்வில் முறைகேடு... மறு தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு...!
தேசிய தேர்வு முகமை UGC-NET ஜூன் 2024 தேர்வை OMR முறையில் 18 ஜூன், 2024 அன்று நாட்டின் பல்வேறு நகரங்களில் இரண்டு பிரிவுகளாக நடத்தியது. ஜூன் 19, 2024 அன்று, யுஜிசி நெட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து தகவல் வந்ததைத் தொடர்ந்து நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேர்வு செயல்முறையின் மிக உயர்ந்த வெளிப்படைத்தன்மை உறுதி செய்வதற்காக, UGC-NET ஜூன் 2024 தேர்வை ரத்து செய்ய இந்திய அரசின் கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. விரைவில் மீண்டும் ஒரு புதிய தேர்வு நடத்தப்படும், அதற்கான தகவல்கள் தனித்தனியாக பகிரப்படும். அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பான முழுமையான சிபிஐ விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் NEET (UG) தேர்வு-2024 தொடர்பான விஷயத்தில், கருணை மதிப்பெண்கள் தொடர்பான பிரச்சினை ஏற்கனவே முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளது. பாட்னாவில் தேர்வு நடத்தப்பட்டதில் சில முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், பீகார் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரியிடம் விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கிடைத்ததும் அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.