மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி கட்டணம் ரத்தா...? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு...!
மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் நகருக்கு அருகே இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்ட கப்பலூர் சுங்கச்சாவடி தொடர்பான விவரங்கள் குறித்து தமிழக அரசு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், மதுரை மாவட்டத்தில் 'கப்பலூரில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் திருமங்கலம், T. கல்லுப்பட்டி, பேரையூர் மற்றும் ராஜபாளையம் வாகன உரிமையாளர்கள் சங்கம் மறியலில் ஈடுபட்டு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் 09.07.2024 அன்று இதற்கு தீர்வு காண கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் பொதுமக்கள், உள்ளூர் வாகனங்களுக்கு ஏற்கனவே 2020-ம் வருடத்திற்கு முன்னர் அளித்த விலக்கு தொடர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக, தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் 18.07.2024 அன்று சென்னையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவரிடம், விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதிலிருந்து விலக்களித்து ஏற்கனவே 2020-ம் ஆண்டிற்கு முன்னால் வழங்கப்பட்ட சலுகைகளை தொடருமாறு கோரினார். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
எனவே, இந்தச் சுங்கச் சாவடியைச் சுற்றியுள்ள மக்கள் பாதிக்காதவாறு தமிழ்நாடு அரசு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.